போதைக்கு எதிரான போரில் தமிழ்நாடு முதலிடமா? CM ஸ்டாலினின் காமெடிக்கு அளவே இல்லையா? அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin law and order july 22
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும், போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அவருக்கு களநிலைமை எதுவும் தெரியவில்லை என்பதையே அவரது இந்தக் கருத்து உறுதிப்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாக எந்த அடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றால், காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் கூறுகிறாராம். கள நிலவரம் தெரியாமல், அதிகாரிகள் அளிக்கும் புள்ளிவிவரங்களைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புவது தான் முதலமைச்சரின் வாடிக்கையாகவும், பலவீனமாகவும் உள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள்களில் நடமாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அதிகாரிகள் அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும், அனைத்து தெருக்களிலும் கஞ்சா வணிகம் தாராளமாக நடைபெறுகிறது. கஞ்சா போதையில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. இவை எதையும் அறிந்து கொள்ளாமல் அதிகாரிகள் கூறுவதை அப்படியே திருப்பிக் கூறுவது பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஒரு லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதில் பெருமையடைய எதுவும் இல்லை. ஒரு லட்சம் கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது என்றால், ஒரு கோடி கிலோவுக்கும் கூடுதலான கஞ்சா பிடிபடாமல் தமிழ்நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
தண்டிக்கப்படுவோரின் விழுக்காடு அதிகரித்து விட்டதாகவும் காவல்துறை பெருமைப்படுகிறது. போதை வணிகத்தில் ஈடுபடுவோரில் ஒரு விழுக்காட்டினரை மட்டும் தான் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்கிறது. அதை வைத்துக் கொண்டு அதிகம் பேர் தண்டிக்கப்பட்டு விட்டதாக கூறுவதெல்லாம் நகைச்சுவை தான்.
போதைப்பொருள் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகரித்து விட்டதாகக் கூறும் தமிழ்நாட்டுக் காவல்துறை தான் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் போதை வணிகத்தை நடத்தி வந்ததையும், தமிழ்நாட்டின் வழியாக போதைப் பொருள்களை கடத்தி வந்ததையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதே காவல்துறை தான் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாகக் கூறி பல குற்றவாளிகள் தப்புவதற்கு காரணமாக இருந்தது என்பதை தமிழகக் காவல்துறை மறுக்க முடியுமா?
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இன்று உருவெடுத்திருப்பது போதைப்பொருள் வணிகம் தான். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? என்ற அச்சத்திலும், கவலையிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதையெல்லாம் உணராமல் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறைந்து விட்டதாக முதலமைச்சர் கூறுவதைப் பார்க்கும் போது, அவரது நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இது போன்று நகைச்சுவை செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் போதைப் பொருள்களை ஒழிக்க உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin law and order july 22