என்எல்சி: பரபரப்பான சூழலில் அன்புமணியின் அறிவிப்பால் அனல் தகிக்கும் கடலூர்!  - Seithipunal
Seithipunal


விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக  வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வரும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய  இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மக்களின் விருப்பமும், வலியுறுத்தலும் ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது.

என்.எல்.சி என்ற தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு நிறுவனத்திற்காக அப்பாவி மக்கள் அரும்பாடுபட்டு விவசாயம் செய்த நிலங்களில் உள்ள பயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான முதல் கண்டனக் குரல் தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, இதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறை சொல்ல முடியாத ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்ட உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், திருச்சியில் உழவர்கள் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

அதிகாரம் எல்லையில்லாத சக்தியை வழங்கும்; இறகுகளே இல்லாமல் பறக்கும் உணர்வை ஏற்படுத்தும்;  தங்களை எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பை உண்டாக்கும். ஆனால், அதிகாரத்தை விட வலிமையானது ஏழை மக்களின் கண்ணீர். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அவர்களை தரைக்கு கொண்டு வந்து செல்வாக்கு இல்லாமல் ஆக்கும் சக்தி மக்களின் கண்ணீருக்கு உண்டு. அதிகார போதையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் சிங்கூர் பகுதிகளில் ஏழை உழவர்களின் நிலங்களை அடக்குமுறை கொண்டு கைப்பற்றியவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்த வரலாறு இப்போதும் நம் கண்முன் காட்சிகளாக விரிந்திருக்கிறது. என்.எல்.சி.க்கு நிலம் கைப்பற்றித் தருவதற்காக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் அனைவரும் இந்த வரலாற்றின் பகுதியாக மாறப்போவது உறுதி என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பயிர்களை அழித்து, வேளாண் விளைநிலங்களை கைப்பற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அத்திட்டத்தை கைவிடுவதுதான் மக்கள் நலன் சார்ந்த அரசின் செயலாக இருக்க முடியும். ஆனால், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்தும், கூடுதல் அடக்குமுறையை கட்டவிழ்ப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து இன்று கூடுதலாக 1000 காவலர்களை வரவழைத்தும், நிலக் கொள்ளையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுகிறது என்றால், அவர்கள் தான் உழவர்களின் முதல் எதிரிகள் ஆவர்.

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன்.

கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், தமிழ்நாடு உழவர் பேரமைப்பு உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Leader Anbumani Announce protest against NLC


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->