மறைந்த இயக்குநரின் மகள்களின் கல்விக்காக உதவி செய்த யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Yogi Babu helped with the education of the late director daughters heaps of praise
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் யோகி பாபு, மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் குடும்பத்திற்கு மனிதநேய உதவி செய்து கவனம் பெற்றுள்ளார்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ போன்ற படங்கள் மூலம் கிராமத்து மக்களின் வாழ்க்கையை இயல்பாகவும் யதார்த்தமாகவும் வெளிப்படுத்தியவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவர் காலமானார். அவரின் மறைவிற்கு முன் இயக்கிய ‘கெணத்த காணோம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு, இயக்குநர் சுரேஷ் சங்கையாவுடன் இருந்த தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். “சுரேஷ் சங்கையாவை ‘காக்கா முட்டை’ பட காலத்திலிருந்தே எனக்கு தெரியும். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் என்னை நடிக்க வைக்க அவர் விரும்பினார். ஆனால் அப்போது எனக்கு தயக்கம் இருந்தது. பிறகு வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவும் அழைத்தார். அப்போது தேதிகள் காரணமாக அது நடக்கவில்லை. பின்னர் என்னை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கினார். அது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “நாம் ஒரு நல்ல இயக்குநரை இழந்துவிட்டோம். ஆனால் அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்த சில காலத்திலேயே அவர் இறந்துவிட்டார். அதனால் அந்தக் குழந்தைகளின் படிப்புக்கு நான் உதவுவேன் என்று முன்பே கூறியிருந்தேன். மேடையில் ஏறி கடவுள் இல்லை என்று சொல்வதை விட மலையேறி கடவுளை வணங்குகிறவன் நான். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சங்கையாவின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவிற்காக யோகி பாபு காசோலை வழங்கினார். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட தொகையை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு நண்பரின் குடும்பத்துக்கு இப்படியாக அமைதியாக உதவி செய்த யோகி பாபுவின் இந்த செயல், திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
English Summary
Yogi Babu helped with the education of the late director daughters heaps of praise