வளைகுடா பதற்றம் உச்சம்: துபாய் அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல்...! - பாதுகாப்பு எச்சரிக்கை!
Gulf tensions peak Drone attack US embassy Dubai Security alert
ஈரான்- இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் பரவலான டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர் அலைபோல் மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க ராணுவத் தளங்கள், தூதரகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது டிரோன்கள் பாய்ந்தன. தொடர்ந்து துபாய் நகரிலுள்ள அமெரிக்க தூதரகமும் தாக்குதலுக்குள்ளானது.
கட்டிடத்தில் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “அனைத்து அமெரிக்க ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் ரியாத் நகரிலுள்ள அமெரிக்க உளவுத்துறை மையமும் டிரோன் தாக்குதலுக்கு இலக்கானது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமான (அல் உதெய்த் விமானப்படை தளம்), கத்தார் தலைநகர் தோஹா அருகே அமைந்துள்ள நிலையில், அந்தத் தளத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரின் ராஸ் லபான், மசயீத் பகுதிகளில் உள்ள மின்சக்தி நிலையங்களும் தாக்கப்பட்டன. பஹ்ரைன் முழுவதும் அதிகாலை வான்வழி அபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் மூழ்கினர்.இதற்கிடையே அபுதாபி, துபாய், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன.
சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் 9 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன.அதே நேரத்தில், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.
டெல் அவிவ் நகரை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் சில இடைமறிக்கப்பட்டன. வெடிமருந்து சிதறல்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.மொத்தத்தில், வளைகுடா பிராந்தியம் முழுவதும் பதற்றம் குவிந்து, மத்திய கிழக்கு நாடுகள் போரின் நிழலில் தள்ளப்பட்டுள்ளன.
English Summary
Gulf tensions peak Drone attack US embassy Dubai Security alert