கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கொலை குற்ற விசாரணை கைதி, சக கைதியால் அடித்து கொலை..!
A prisoner under investigation for murder at Kilpauk Mental Hospital was beaten to death by a fellow prisoner
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் சக கைதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிரிமினல் வார்டில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி ஆழியார் காவல் நிலையம் சார்பில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஹிர் என்ற 27 வயதுடைய வாலிபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதே வார்ட்டில் தென்காசி மாவட்டம் அருணாச்சலப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்தசாமி (19) என்பவரும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர்களுடன், 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கிரிமினல் வார்டில் இருந்து கழிவறைக்கு செல்வதில் அரவிந்தசாமி மற்றும் ஜாஹிர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில், அரவிந்தசாமி கடுமையாக தாக்கியதில் ஜாஹிருக்கு கண், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜாஹிரின் அலறல் சத்தம் கேட்டு, உடனே பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஜாஹிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
அங்கு ஜாஹிருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் டாக்டர் சுமித்ரா, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் அரவிந்த சாமி மீது புகார் அளித்த்துள்ளார்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர்களிடம் மேல் நடவடிக்கை குறித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜாஹிர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஜாஹிர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் சாலையில் சென்ற நபரை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவர்.
அவரது வீட்டு முகவரி எதுவும் இதுவரை தெளிவாக இல்லாத காரணத்தினால், உயிரிழந்த ஜாஹிர் குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஜாஹிர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A prisoner under investigation for murder at Kilpauk Mental Hospital was beaten to death by a fellow prisoner