மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss condemn to DMK mkstalin Govt
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சென்னையை அடுத்த தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை மையத்தில் தங்கி படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவி அங்கு பணியாற்றி வரும் காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்.
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்று வரும் மாணவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீடுகளுக்கு சென்றுள்ளனர். திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் மட்டும் விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட காவலாளி, மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் மாணவிக்கு இரு கால்களும் உடைந்ததுடன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவி தந்தையை இழந்தவர். கடும் வறுமையில் வாடும் மாணவி அரசு இல்லம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பி தான் சேவை இல்லத்தில் தங்கி பயின்று வந்திருக்கிறார். அங்கேயே மாணவிக்கு இப்படி ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாவில்லை. விடுதியை காவல் காக்க வேண்டிய காவலாளியே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்றால், அந்த நேரத்தில் விடுதியில் வேறு பணியாளர்கள் எவரும் இல்லையா? வார்டன் உள்ளிட்ட பெண் பணியாளர்கள் எங்கு போனார்கள்? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான வினாக்கள் எழுகின்றன. அவை அனைத்திற்கும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. பல்கலைக்கழக வளாகங்களில் தொடங்கி அரசு சேவை இல்லங்கள் வரை பெண் குழந்தைகள் மனித மிருகங்களால் வேட்டையாடப்படுகின்றனர். இந்தக் கொடுமைகளை தடுப்பதற்கு திறனற்ற அரசு சாதனைகளை படைத்து விட்டதாக போலிப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு செழிப்பாக இருப்பதாகவும், மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் நினைத்துக் கொண்டு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர். அய்யோ, பாவம் .... அவருக்கு எதுவுமே தெரியவில்லை.
தமிழ்நாட்டில் எங்குமே பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலையை உருவாக்கி வைத்திருப்பது தான் திராவிட மாடல் அரசின் நான்காண்டு கால சாதனை. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக முன்னெடுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss condemn to DMK mkstalin Govt