நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ECR நிலம் வழக்கு; இடைக்காலத் தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..!
The Madras High Court has issued an interim stay in the case involving the ECR land owned by actress Sridevi
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1988-ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) சுமார் 4.77 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியிருந்தார்.
கடந்த 37 ஆண்டுகளாக இந்தச் சொத்து ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி மற்றும் அவரது வாரிசுகள், தங்களுக்கு இந்தச் சொத்தில் பங்கு இருப்பதாகக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் நடந்ததாகக் கூறுவதால், இவர்களைச் சட்டப்பூர்வ வாரிசுகளாகக் கருத முடியாது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிவில் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து இறுதி விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
The Madras High Court has issued an interim stay in the case involving the ECR land owned by actress Sridevi