நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம்; 16-ஆம் தேதி கழகத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தி.க. தலைவர் கி.வீரமணி..!
K Veeramani announced that a protest will be held on the upcoming 16th demanding the cancellation of the NEET examination
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் மே 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், நீட் என்ற தேர்வைத் திணித்து கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக் கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது. ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்தது.
தமிழ்நாடு முதலில் எச்சரிக்கை செய்தபோது வேடிக்கை பார்த்த பிற மாநிலங்கள் இன்று தான் விழிப்படைந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது. அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னது போல. தகுதி திறமையின் அடையாளம் அல்ல: ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகள். 48 முறை மறு தேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா? இது கார்ப்பரேட்டுகள் கொழிக்க செய்யப்பட்ட ஏற்பாடு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி நீட் என்பது தேர்வு அல்ல: இது ஏலமாக மாறி வருகிறது என்று தெரிவித்துள்ளாரே!

இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு ஒன்றிய அரசு இந்த ஆண்டு மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. 22 லட்சம் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த நீட் தேர்வு அல்ல. ஒட்டுமொத்தமாகவே "நீட் தேர்வு" ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது.
மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க "இந்தியா முழுமையும் நீட் தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மே 16 சனிக்கிழமை காலையில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.நாட்டு நடப்புகள்
பொது நோக்கத்துக்காக உரிமையுடன் அழைக்கிறது திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளோர் ஓரணியில் திரள வேண்டுகிறோம்!
கழகத் தோழர்களே. களத்திற்கு வாரீர்! உடனடியாக ஆர்ப்பாட்டப் பணிகளைத் தொடங்குவீர்" என தெரிவித்துள்ளார்.
English Summary
K Veeramani announced that a protest will be held on the upcoming 16th demanding the cancellation of the NEET examination