தனுஷ் ரசிகர் மன்றத்திற்கு திடீர் புதிய கொடி? அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? ரசிகர் மன்ற தலைவர் கொடுத்த விளக்கம்!
A sudden new flag for the Dhanush fan club Is Dhanush entering politics The fan club president offers an explanation
தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்காக புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்தக் கொடியின் பின்னணி என்ன என்பது குறித்து தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மேலும் சில நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ், தான் அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதேபோல், தனக்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சியில் இணைவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, சிம்பு உள்ளிட்டோரின் ரசிகர்களும் தங்களது விருப்ப நாயகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் பெயரும் அரசியல் வட்டாரத்தில் திடீரென அடிபடத் தொடங்கியது.
அண்மையில் தனுஷ் நடிப்பில் ‘கர’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் பல்வேறு விதமான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தனுஷின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ரசிகர் மன்றக் கொடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்தக் கொடியில், ‘எண்ணம் போல் தான் வாழ்க்கை’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இது அவரது அரசியல் வருகைக்கான முதல் அடையாளம் என்றும் தகவல்கள் பரவத் தொடங்கின.
விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனுஷும் அதே பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. தனுஷ் எப்போது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்தன.
இந்த நிலையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணிய சிவா, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தக் கொடி புதிது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்தக் கொடியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்றக் கூட்டத்தில் சில ரசிகர்கள், அந்தக் கொடியை காரில் பொருத்திப் பயன்படுத்தும் வகையில் புதிய வடிவத்தில் தயாரித்துக் கொண்டனர். அவர்கள் அதை காரில் பொருத்தியதைப் பார்த்த சிலர், தனுஷுக்காக புதிதாக கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்றும் தவறாகப் புரிந்துகொண்டனர்” என்று சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.
இதன் மூலம் தனுஷ் புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்றும் பரவிய தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையேயான தொடர்பு புதிதல்ல. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் தனது உடல்நிலையையும், ரசிகர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல்களையும் சந்தித்தார். பின்னர் 2024ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
அதேபோல், நடிகர் சரத்குமார் ஏற்கெனவே சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி அரசியலில் பயணித்தார். பின்னர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். தற்போது அங்கு அவருக்கு முக்கிய பதவி கிடைக்கவில்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தத் தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. அதேபோல் தனுஷும் அரசியல் வருகை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால், விஜய்யின் அரசியல் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் தொடர்பான ஒவ்வொரு ரசிகர் மன்ற நடவடிக்கையும் அரசியலுடன் இணைத்துப் பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தனுஷின் ரசிகர் மன்றக் கொடி விவகாரமும் அதற்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளது.
தற்போதைக்கு தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல் வெறும் வதந்தி என்பது தெளிவாகியிருந்தாலும், விஜய்யின் அரசியல் வெற்றி மற்ற முன்னணி நடிகர்களை மனதளவில் யோசிக்க வைக்குமா என்ற கேள்வி மட்டும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.
English Summary
A sudden new flag for the Dhanush fan club Is Dhanush entering politics The fan club president offers an explanation