பாவா லட்சுமணனுக்கு ஃப்ரிட்ஜ் முதல் அடுப்பு வரை அள்ளி அள்ளி கொடுத்த லெஜண்ட் சரவணன்!
Legend Saravanan generously gifted everything from a fridge to a stove to Paava Lakshmanan
நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு கால் விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தங்குவதற்குக்கூட இடமின்றி தவித்து வந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து, எம்.எல்.ஏ விடுதியில் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த நிலையில், நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் பாவா லட்சுமணனுக்கு தொடர்ந்து உதவிகளை அள்ளிக் கொடுத்திருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர் பாவா லட்சுமணன். அந்த நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்ற அவர், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இயல்பாகவே அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வும், நடிப்புத் திறமையும் சினிமாவில் அவருக்கு பக்கபலமாக அமைந்தன. இதன் காரணமாக வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். தனியாகவும் பல நகைச்சுவைக் காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
தற்போது 60 வயதாகும் பாவா லட்சுமணன் திருமணம் செய்துகொள்ளவில்லை. தான் சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று அவர் முன்பு ஒரு பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
ஒருகாலத்தில் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவரது வாழ்க்கை, காலப்போக்கில் முற்றிலும் மாறியது. பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில் அவரது உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரித்ததால், கால் விரல்களை அகற்ற வேண்டிய நிலை உருவானது.
அந்தக் கடினமான காலகட்டத்தில் ‘கலக்கப்போவது யாரு’ பாலா, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பாவா லட்சுமணனுக்கு உதவி செய்தனர்.
வடிவேலுவுடன் அதிகமான திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் பாவா லட்சுமணன். இதனால் அவரது நிலைமை குறித்து அறிந்ததும் வடிவேலு ஏதாவது உதவி செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாவா லட்சுமணன் தங்குவதற்குக்கூட வீடு இல்லாமல் தவித்து வருவது சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் தெரியவந்தது. இதையறிந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அவரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ விடுதியில் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதையடுத்து பாவா லட்சுமணன் அங்கு குடியேறினார். ஆனால், வீடு கிடைத்தாலும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன், பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டினார். முதலில் தனது சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அதோடு மட்டும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. பாவா லட்சுமணன் புதிய வீட்டில் பயன்படுத்துவதற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டி, அடுப்பு, சமையல் பாத்திரங்கள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
வீடு கிடைத்தாலும் அதில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் பாவா லட்சுமணன் சிரமப்படக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்து லெஜண்ட் சரவணன் உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
திரைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் உடல்நலப் பிரச்சினைகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் தவிக்கும்போது, அவரைத் தேடிச் சென்று நிதியுதவி வழங்கியதோடு நிற்காமல், வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்த லெஜண்ட் சரவணனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதே நேரத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பாவா லட்சுமணன் இவ்வளவு கஷ்டப்பட்ட நிலையில், நடிகர் சங்கம் இதுவரை அவருக்கு தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒருபக்கம் அமைச்சர் ராஜ்மோகன் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், மறுபக்கம் லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவியுடன், ஃபிரிட்ஜ் முதல் சமையல் பாத்திரங்கள் வரை அள்ளிக் கொடுத்திருப்பது பாவா லட்சுமணனின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Legend Saravanan generously gifted everything from a fridge to a stove to Paava Lakshmanan