2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மட்டுமல்ல, அரசியல் காட்சிகளும் வேகமாக மாறி வருகின்றன. ஒருகாலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக வெளியான தகவல்களே தமிழக அரசியல் களத்தை அதிர வைத்தன. அந்த வகையில், பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த திமுகவும் நாம் தமிழர் கட்சியும் அண்மைக்காலமாக மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைவர்களுடனான நேரடி சந்திப்புகள், திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என சீமானுக்கும் திமுக தரப்புக்கும் இடையேயான தொடர்பு அதிகரித்து வருவதாக நாம் தமிழர் கட்சியினரே கூறுகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் தொண்டை வலிக்க திமுகவை விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள், தற்போது தங்களது முழு கவனத்தையும் தவெக பக்கம் திருப்பியிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதுபோலத்தான் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்ளாத இரண்டு முக்கிய கட்சிகள் என்றால் அது திமுகவும் அதிமுகவும்தான்.
இந்த இரு கட்சிகளைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடந்த காலங்களில் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளன.
ஆனால், தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே தேர்தல்களைச் சந்தித்து வரும் முக்கியக் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். சீமான் தொடங்கிய இந்தக் கட்சி பல தேர்தல்களில் வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், தொடர்ந்து தனித்தே களம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகமும் 2026 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
அதே நேரத்தில், மற்ற கட்சிகளை விமர்சிக்கிறாரோ இல்லையோ, திமுகவை மிகக் கடுமையாக விமர்சிப்பதை சீமான் வழக்கமாக வைத்திருந்தார். அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், சில நேரங்களில் தனிப்பட்ட முறையிலும் திமுகவையும் அதன் தலைவர்களையும் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சீமானின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர்களுடன் சீமான் ஒன்றாகப் பங்கேற்று வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சீமானுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபோது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாய்மாமன் சீர் கொண்டு சென்று வாழ்த்து தெரிவித்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினரை நெகிழ வைத்தது.
அதன்பிறகு இயக்குநர் கவுதமன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சீமானும் பங்கேற்றனர். அப்போது இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
அதைத் தொடர்ந்து துறைமுகம் சுஜாதா இல்லத் திருமண நிகழ்வில் சீமானும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றனர். இருவரும் கட்டியணைத்து, கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தன.
இதையெல்லாம் அரசியல் நாகரிகம் என்று ஒருபுறம் கூறினாலும், இரு கட்சிகளுக்கும் இடையே சமீபகாலமாக ஒரு புதிய அரசியல் புரிதல் உருவாகி வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சீமான் திமுக தலைமையை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவரை திமுக தலைமை எப்போதும் தனிப்பட்ட விரோதத்துடன் பார்த்ததில்லை என திமுகவினர் கூறுகின்றனர். சீமானின் குடும்பத்தில் சில சோக நிகழ்வுகள் நடைபெற்றபோது மு.க.ஸ்டாலின் நேரடியாக அவரைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், ஸ்டாலின் வீட்டுக்கும் சீமான் சில சந்தர்ப்பங்களில் நேரில் சென்றுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இருந்த பல கட்சிகள் வெவ்வேறு அணிகளுக்குச் சென்றுவிட்டன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணியை கிட்டத்தட்ட முழுமையாக உடைத்துவிட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர்களின் ஆதரவை கணிசமான அளவில் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியுடன் தேவையற்ற மோதலைத் தொடர்வதைவிட, அரசியல் ரீதியாக இணக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது வரை சீமான் சட்டமன்றத்திற்குள் நுழையாத நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து நிற்க வலுவான வேட்பாளர்கள் தேவை என்பதும் திமுகவின் அரசியல் கணக்காக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஒரு தொகுதியில் பொது வேட்பாளராக சீமானைக் களமிறக்கும் யோசனைகூட சில வட்டாரங்களில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீமான் சட்டமன்றத்திற்குள் சென்றால், புள்ளிவிவரங்களுடன் ஆளும் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக எதிர்கொள்ள முடியும் என்பதே இந்தக் கணக்கின் பின்னணியாக கூறப்படுகிறது.
அதேபோல், கள அரசியலின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமானால் கூட்டணி அரசியல் அவசியம் என்ற கருத்தும் நாம் தமிழர் கட்சிக்குள் எழத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் எதிரியான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள திமுகவும் நாம் தமிழர் கட்சியும் ஏதாவது ஒரு வகையில் கைகோர்த்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக சீமான் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்றும், அதற்காக கிடைக்கும் அரசியல் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே சில குரல்கள் எழத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் உண்மையில் நடக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒருகாலத்தில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள், கடந்த சில நாட்களாக திமுக விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, தங்களது விமர்சனங்களை அதிகமாக தவெக பக்கம் திருப்பியிருப்பதைப் பார்த்தால், தமிழக அரசியலில் திரைமறைவில் ஏதோ ஒரு புதிய கணக்கு தொடங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
English Summary
Seeman changes his tone Is Seeman cozying up to the DMK A new strategy to counter TVK