2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை அடியோடு மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டதால், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சியை மீண்டும் வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுகவில் பல ஆண்டுகளாக சக்திவாய்ந்த அதிகார மையங்களாக இருந்து வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ‘தொகுதிச் செயலாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக தொகுதிச் செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பதவிகளில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் திமுகவின் கள ஆய்வுக் குழுக்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டன.
மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் நடைபெற்ற இந்த ஆய்வில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் பெறப்பட்டன.
இந்த ஆய்வின்போது பல மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளே முக்கிய காரணம் என்று கட்சியினர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியைச் சந்தித்ததை கட்சியினரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, பலம் வாய்ந்த 15க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது திமுக தலைமையை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறிய கள ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எந்தெந்த பகுதிகளில் கட்சி பலவீனமாக இருந்தது, எந்த நிர்வாகிகள் சரியாகச் செயல்படவில்லை, வேட்பாளர் தேர்வில் என்ன தவறுகள் நடந்தன, கூட்டணி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகே கட்சியை பெரிய அளவில் மறுசீரமைக்கும் முடிவுக்கு அவர் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக திமுக சார்பில் தனியாக மறுசீரமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பணிகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் வெளிவந்த முக்கியமான தகவல்களில் ஒன்று, திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மிகப்பெரிய அதிகார மையங்களாக மாறியிருப்பது என்பதாகும்.
வேட்பாளர் தேர்வு முதல் உள்ளூர் நிர்வாகிகள் நியமனம் வரை பெரும்பாலான முக்கிய முடிவுகளில் மாவட்டச் செயலாளர்களின் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கள ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பல மாவட்டங்களில் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் நேரடியாக தலைமையை அணுக முடியாத நிலையும், மாவட்டச் செயலாளர்களின் முடிவுகளே இறுதியானதாக இருக்கும் சூழலும் உருவாகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த அதிகாரக் குவிப்பை மாற்றும் வகையில்தான் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக ‘தொகுதிச் செயலாளர்’ என்ற புதிய பொறுப்பை உருவாக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைப் பகிர்ந்து, தொகுதி அளவில் நேரடியாகச் செயல்படும் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் தமிழகம் திரும்பிய பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி என்பது மிகவும் சக்திவாய்ந்த பொறுப்பாக இருந்து வருகிறது. கட்சியின் அரசியல் வரலாற்றிலும் மாவட்டச் செயலாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
கடந்த 1993ஆம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது, அவருடன் பல மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர். அப்போது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதிகாரத்தைப் பரவலாக்கவும் ‘பகுதிச் செயலாளர்’ என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றுள்ள நிலையில், திமுகவின் அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக தொகுதிச் செயலாளர்களை நியமிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாக ஒரு நிர்வாகக் கட்டுப்பாடு உருவாகும். மாவட்டச் செயலாளர்களின் அதிகாரமும் ஓரளவு பகிரப்படும்.
அதுமட்டுமின்றி, தொகுதி வாரியாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது, வாக்குச்சாவடி அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற பணிகளையும் நேரடியாகக் கண்காணிக்க முடியும்.
இதில் மிக முக்கியமாக இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே உதயநிதி ஸ்டாலின் தரப்பின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவில் இளம் தலைமுறைக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று உதயநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே தொகுதிச் செயலாளர் திட்டம் உருவாகியிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்தப் புதிய பதவிகளில் பெரும்பாலானவை இளைஞரணி நிர்வாகிகளுக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அடுத்த தலைமுறை தலைவர்களை சட்டமன்றத் தொகுதி அளவிலேயே உருவாக்க முடியும் என்பது உதயநிதி தரப்பின் கணக்காக கூறப்படுகிறது.
அதேபோல், மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காமல் நீண்ட காலமாக அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் தொகுதிச் செயலாளர் பதவி வழங்கும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தத் திட்டத்திற்கு திமுகவுக்குள் முழுமையான ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக இருந்து வலுவான அதிகார மையங்களை உருவாக்கியுள்ள சீனியர் நிர்வாகிகள், புதிய தொகுதிச் செயலாளர் பதவி மூலம் தங்களது அதிகாரத்தை தலைமை குறைக்க முயற்சிப்பதாக கருதுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் திமுகவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் புதிய அதிகாரப் போட்டியை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருபுறம் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை குறைத்து கட்சியை அடிமட்டத்தில் வலுப்படுத்தும் முயற்சி; மறுபுறம் இளைஞரணியை முன்னிறுத்தி அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் திட்டம் என திமுகவில் மிகப்பெரிய மாற்றத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
234 தொகுதிகளுக்கும் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், திமுகவின் பல ஆண்டுகால அதிகாரக் கட்டமைப்பில் இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
அதேநேரத்தில், இந்த மாற்றம் கட்சியை மீண்டும் வலுப்படுத்துமா அல்லது சீனியர் நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே புதிய அதிகார மோதலை உருவாக்குமா என்பதுதான் தற்போது திமுக வட்டாரத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.