பாகிஸ்தானில் கையெறி குண்டு வீசி தாக்குதல்! 3 பேர் பலி!
Three people killed grenade attack in Pakistan
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம் மீண்டும் குண்டு வெடிப்பால் அதிர்ந்துள்ளது. கைபர் மாவட்டத்தின் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவம்பர் 7) நடைபெற்ற கையெறி வெடிகுண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஒருவருக்கு தீவிர காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். வெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதலின் காரணம் மற்றும் பின்னணி குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளின் கை இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சமீப மாதங்களில் கைபர் பக்துன்குவா, பாகிஸ்தானில் அதிக தாக்குதல்கள் நிகழும் மாகாணமாக மாறியுள்ளது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் பாதுகாப்புக் கோட்டைகள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டுக்குள் பயங்கரவாதச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக புலனாய்வுக் குழுக்கள் எச்சரித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு தாக்குதல்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் இரட்டிப்பு அளவில் உயர்ந்துள்ளன.
சமீபத்தில் வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் பல போலீசார் மற்றும் ராணுவத்தினர் பலியாகியிருந்தனர். இதையடுத்து, மத்திய அரசும் கைபர் பக்துன்குவா நிர்வாகமும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியிருந்தாலும், பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கும் நிலையில் உள்ளனர்.
English Summary
Three people killed grenade attack in Pakistan