பெரம்பலூர் மேம்பாலத்தில் சோகம்: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்!
Tragic Omni Bus Crash on Perambalur Flyover Claims 2 Lives 6 Injured
சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை வேளையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் பலகை கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து, பேருந்திற்குள் காயங்களுடன் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சங்கம்புரி பகுதியைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்பால்துரை (52) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மணலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (34) என்பது தெரியவந்தது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (44), மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அர்ஜுன் (31), சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த அஸ்வத் (31), மதுரை மேலூரைச் சேர்ந்த ரகுமான் (21) மற்றும் மதுரை சாவடியைச் சேர்ந்த வெண்ணிலா உள்ளிட்ட 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்தனர். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tragic Omni Bus Crash on Perambalur Flyover Claims 2 Lives 6 Injured