ஊரப்பாக்கம் அருகே சோகம்: பள்ளி பேருந்து மோதி தாய், மகள் பரிதாப பலி!
Tragic Collision Near Urapakkam Claims Lives of Mother and Daughter
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் தேவி (45). இவருடைய மகள் சுவாதி (23). தாய்-மகள் இருவரும் தங்களது அன்றாடப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஊரப்பாக்கம் நோக்கிப் புறப்பட்டனர். வாகனத்தை மகள் சுவாதி ஓட்ட, தாய் தேவி பின்னால் அமர்ந்து பயணித்தார்.
இவர்களது வாகனம் காரணை புதுச்சேரி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல (Overtake) சுவாதி முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே மிகச் அதிவேகமாக வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிப் பேருந்து ஒன்று, இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுவாதியை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்து நடந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் யாரும் பயணிக்கவில்லை என்றும், ஓட்டுநரும் நடத்துநரும் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கூடுவாஞ்சேரி - தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பள்ளிப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragic Collision Near Urapakkam Claims Lives of Mother and Daughter