மகாராஷ்டிராவில் நிலத்தகராறு: பெற்றோரையே சாலையில் வைத்து தடியால் தாக்கிய கொடூர மகன்கள் – புனேயில் பரபரப்பு
Shocking Incident in Pune Sons Brutally Assault Elderly Parents on Street Over Land Dispute
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான துகாராம் கிசான் ராவத். இவரது மனைவி அஞ்சனா. இந்தத் தம்பதியினர் வழக்கம்போல் மாலை வேளையில் தங்களது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்து இறங்கிய அவர்களது மகன்களான சஞ்சய் ராவத் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோர் இருவரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மனைவி அஞ்சனாவின் பெயரில் இருந்த குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை, துகாராம் சமீபத்தில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. நிலத்தை விற்றதால் கடுமையாக ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரைக் கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அந்த நிலப் பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் உருவானது.
வாக்குவாதம் எல்லை மீறிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மகன்கள் இருவரும் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் பெற்றோர் இருவரையும் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முகம், முதுகு, தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், அவரது மனைவி அஞ்சனாவின் மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான காயங்கள் உண்டாயின.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்து உயிருக்குப் போராடிய தம்பதியினரை மீட்டு, உடனடி சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகிய இருவரையும் கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நில ஆசையால் பெற்ற பெற்றோரையே நடுரோட்டில் வைத்து தடியால் தாக்கிய இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking Incident in Pune Sons Brutally Assault Elderly Parents on Street Over Land Dispute