ஜெயிலர் 2 வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரஜினி! அக்டோபர் 15 ரிலீஸ் உறுதி.. 1000 கோடி வசூல் அடிக்குமா? - Seithipunal
Seithipunal


“குறி வச்சா இரை விழணும்” என 'வேட்டையன்' படத்தில் பஞ்ச் டயலாக் பேசியிருந்தாலும், அந்தப் படம் 'ஜெயிலர்' அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. 'எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்த 'ஜெயிலர்' படத்துக்குப் பிறகு வெளியான 'லால் சலாம்', 'வேட்டையன்', 'கூலி' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், அடுத்ததாக வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம், சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ரூ.1000 கோடி வசூலை சாத்தியமாக்கும் படமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நிலவி வருகிறது.

இதற்கிடையே 'ஜெயிலர் 2' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் தரப்பில், திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து 'ஜெயிலர் 2' திரையரங்குகளில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சென்சார் தொடர்பான பிரச்னைகள், படம் தொடர்பான தகவல்கள் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

மறுபுறம், சூர்யா எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் கருதுகின்றனர். இந்த சூழலில் அக்டோபர் 15-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால், மற்ற மொழித் திரைப்படங்களின் போட்டிக்கு மத்தியில் தமிழ் சினிமாவும் பாக்ஸ் ஆபீஸில் வலுவான நிலையைப் பெற முடியும் என திரையரங்க வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெற்றி ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களுக்கு மட்டுமின்றி, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத் துறைக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு பிரம்மாண்டமான வசூலை குவித்தால், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் திரைப்படமாகவும் 'ஜெயிலர் 2' உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நெல்சனின் மீதான நம்பிக்கையும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. 'ஜெயிலர்' படத்தை நெல்சன் தரமாக உருவாக்கியிருந்த நம்பிக்கையில்தான் ரஜினிகாந்த்–கமல்ஹாசன் இணையும் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியானதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. 'ஜெயிலர் 2' எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றால், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குநர் தொடர்பாகவும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

அதேபோல், கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்தின் மீதும் 'ஜெயிலர் 2' படத்தின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பை நிர்ணயிக்கும் முக்கியமான படமாகவும் 'ஜெயிலர் 2' பார்க்கப்படுகிறது.

இயக்குநர் நெல்சனின் திரைப்பயணத்திலும் 'ஜெயிலர் 2' முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இயக்கிய நெல்சன், நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது தனித்துவமான காமெடி மற்றும் மேக்கிங் மூலம் கவனம் ஈர்த்தார்.

அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'ஜெயிலர்' நெல்சனின் திரைப்பயணத்தையே மாற்றியது. அந்த திரைப்படம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டு, மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜெயிலர் 2' படத்தை உருவாக்கி வரும் நெல்சன், தனது முழு பலத்தையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. முதல் பாகத்தின் வெற்றியை மிஞ்சும் வகையில் திரைக்கதை, ஆக்‌ஷன், காமெடி மற்றும் ரஜினியின் மாஸ் தருணங்களை இணைத்துள்ளதாகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அக்டோபர் 15-ம் தேதி 'ஜெயிலர் 2' திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளையும் சன் பிக்சர்ஸ் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனமும் தற்போது 'ஜெயிலர் 2' பக்கம் திரும்பியுள்ளது. முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடி கிளப்பில் தமிழ் சினிமாவை நுழைய வைக்குமா என்பதே தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajini under pressure for Jailer 2 to succeed October 15 release confirmed Will it gross 1000 crore


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->