அதிமுக–அமமுக கூட்டணி உடைகிறதா? எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன்.. சசிகலாவுடன் மீண்டும் ஒரு பிளான்?
Is the AIADMK AMMK alliance crumbling TTV Dhinakaran deals a shock to Edappadi A new plan with Sasikala
அதிமுக–அமமுக கூட்டணி வலுவாகவே இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தாலும், மறுபுறம் அதிமுகவில் உள்ள சில அதிருப்தி நிர்வாகிகளுடன் அவர் பேசி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சசிகலாவுடன் இணைந்து மீண்டும் அதிமுகவுக்குள் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளிடம் தினகரன் பேசியதாக கூறப்படுவது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை சுற்றி நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, பல்வேறு தலைவர்களின் வெளியேற்றம், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் என பல்வேறு கட்டங்களை அதிமுக சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்த சிலர் மீண்டும் கட்சியுடன் இணைந்திருந்தாலும், அவர்களுக்குள் நிலவும் அதிருப்தி முழுமையாக மறையவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் தற்போதைய அரசியல் நகர்வுகள் அதிமுக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள தினகரன், அடுத்தகட்டமாக அதிமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகளை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் அரசியல் நிலையும் கேள்விக்குள்ளானதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்ததாக கூறப்படும் நிலையில், அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதையடுத்து பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியைவிட்டு வெளியேறியதாகவும், அவர்களில் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் அடுத்தகட்ட அரசியல் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் அதிமுகவை மீண்டும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
மறுபுறம், கரூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த சில முக்கிய நிர்வாகிகளும், தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த சில முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே பல்வேறு தலைவர்களின் வெளியேற்றத்தால் பலவீனமடைந்துள்ள அதிமுக அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வருவதற்கான முயற்சிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சசிகலாவை சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அரசியல் பின்னணி குறித்தும் அதிமுக மற்றும் அமமுக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளையில், தனது பங்குக்கு அதிமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை அமமுக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை உருவாக்குவதா அல்லது அக்கட்சியில் உள்ள சில நிர்வாகிகளை தன்னுடன் அழைத்து வருவதா என்பதுதான் தினகரனின் தற்போதைய அரசியல் கணக்காக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த தகவல்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஊடகங்களிடம் பேசும்போது அதிமுகவும் அமமுகவும் ஒன்றுபட்ட அணியாக இருப்பதாக டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மறுபுறம் அதிமுக நிர்வாகிகளுடன் அவர் தனிப்பட்ட முறையில் பேசி வருவதாக வெளியான தகவல்கள் எடப்பாடி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த கால அரசியல் மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவை கூட்டணியில் இணைத்ததாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் கூறி வருவதாகவும், அதன் மூலம் அமமுகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைத்த நிலையிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கூட்டணியில் இணைத்த அதே அதிமுகவின் அமைப்பையே பலவீனப்படுத்தும் வகையில் தினகரனின் நகர்வுகள் இருப்பதாக எடப்பாடி தரப்பு கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அதிமுக–அமமுக இடையேயான உறவில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வருவதற்கான பேச்சுகள், மறுபுறம் அதிமுக அதிருப்தியாளர்களுடன் டிடிவி தினகரன் தொடர்பில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் என அடுத்தடுத்து அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதால், இந்த கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதே தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Is the AIADMK AMMK alliance crumbling TTV Dhinakaran deals a shock to Edappadi A new plan with Sasikala