விஜய்யை அவசரமாக சமாதானப்படுத்திய காங்கிரஸ் தலைமை? ராகுல் விவகாரத்தில் நடந்த திரைமறைவு பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் தவெக–காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து மோதல் தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் வேட்பாளராக விஜய்யை தவெக அமைச்சர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் நிலையில், அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை அவசரமாக முயற்சி மேற்கொண்டதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் விஜய் 9 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தவெக தரப்பில் விஜய்யை வெறும் பிரதமர் வேட்பாளர் என்ற அளவில் மட்டுமின்றி, “வருங்கால பிரதமர்” என்ற வகையிலும் முன்னிறுத்தும் பேச்சுகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் தேசிய அரசியல் பிம்பத்தை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாகவும், இது காங்கிரஸ் தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தபோது, 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு விஜய் தரப்பு துணை நிற்கும் என்ற உறுதி அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியுடனும் விஜய் தனிப்பட்ட முறையில் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்றும், அவரை பிரதமராக்குவதில் தவெகவின் பங்கு இருக்கும் என்றும் விஜய் உறுதியளித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியதைப் போல, மத்தியில் பாஜகவையும் வீழ்த்த முடியும் என ராகுலுக்கு விஜய் நம்பிக்கை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தின் செயல்பாடுகளை நேரடியாக எதிர்கொண்ட பிறகு, தமிழகத்தில் ஆட்சியை நிலையாக நடத்துவதற்கு மத்திய அரசுடனான உறவும் முக்கியம் என்பதை விஜய் தரப்பு உணர்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் விவகாரத்தில் விஜய் தரப்பு தயக்கம் காட்டுவதாகவும், இந்தியா கூட்டணியில் இணைவதற்கும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், மத்திய பாஜக அரசுடன் இணக்கமான அரசியல் உறவை உருவாக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக சீண்டும் வகையில் தவெக தரப்பின் சில நகர்வுகள் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் செய்திகள் தேசிய அளவில் கவனம் பெறுவது காங்கிரஸ் தலைமைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என கூறப்படுகிறது.

இதன் பின்னணியில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு விஜய் தரப்புக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்க அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், விஜய்யை விமர்சிக்கும் வகையில் குட்டிக்கதை ஒன்றை கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் விலகும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த எச்சரிக்கை, விஜய் அரசுக்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறக்கூடும் என்ற மறைமுக சமிக்ஞையாக பார்க்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தரப்பின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டால் விஜய் தரப்பு தங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஆனால், அதற்கு மாறாக விஜய்யின் எதிர்வினை இருந்ததாக கூறப்படுவதால் காங்கிரஸ் தலைமை அவசரமாக நிலைமையை சமாளிக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அமைச்சர் ராஜேஷ்குமாரின் எச்சரிக்கையால் விஜய் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. “காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து வெளியேற விரும்பினால் வெளியேறட்டும். ஆதரவை திரும்பப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளட்டும். ஆட்சியை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என விஜய் தனது தனிச்செயலாளர் ஜெகதீஸ் பழனிசாமியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் காங்கிரஸ் தரப்புக்கு சென்றதும், கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி நிலைமையை சமாளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை தொடர்புகொண்டு விஜய்யின் அதிருப்தி குறித்து தெரிவித்ததாகவும், வேணுகோபால் இந்த விவகாரத்தை தான் பார்த்துக்கொள்வதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரவீன் சக்கரவர்த்தியை தொடர்புகொண்ட கே.சி. வேணுகோபால், அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியும் அவ்வப்போது அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய் மீதான ராகுல் காந்தியின் மரியாதையும் நட்பும் தொடர்ந்து இருப்பதாக ராகுல் தெரிவித்ததாகவும், இந்த தகவலை விஜய்யிடம் நேரடியாக தெரிவிக்குமாறும் வேணுகோபால் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாக்கூருடன் இணைந்து விஜய்யை நேரில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ராகுல் காந்தியின் நிலைப்பாடு குறித்து விஜய்யிடம் விளக்கப்பட்டதாகவும், பின்னர் கே.சி. வேணுகோபாலுடன் தொலைபேசியில் விஜய்யை நேரடியாக பேச வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த உரையாடலின்போது வேணுகோபால் விஜய்யை சமாதானப்படுத்தியதாக தவெக மேலிடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தற்காலிகமாக தணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ராகுல் காந்திக்கு எதிரான தவெக தரப்பின் அரசியல் நகர்வுகளை காங்கிரஸ் தலைமை முழுமையாக மறந்துவிடவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தவெக–காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த சமாதானம் நிரந்தரமானதா அல்லது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் மீண்டும் மோதல் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் தேசிய அரசியல் ஆசை, ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் விவகாரம் மற்றும் மத்திய அரசுடனான உறவு ஆகிய மூன்று அம்சங்களும் கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did the Congress leadership hastily pacify Vijay Behind the scenes talks regarding the Rahul issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->