“அடுத்த பிரதமர் விஜய்” கோஷம்.. காங்கிரஸுக்கு அதிர்ச்சி, பாஜகவுக்கு லாபமா? தவெகவின் தேசிய அரசியல் கணக்கு என்ன?
Vijay for Next Prime Minister Slogans A Shock for Congress a Gain for BJP What is TVK National Political Strategy
தமிழக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது தேசிய அரசியலையும் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்” எனப் பேசியதைத் தொடர்ந்து, அமைச்சர் 'கில்லி' சரத்குமார், “இந்தியாவின் நாளைய பிரதமர் விஜய்” எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இதன்பின்னர் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட தவெக எம்எல்ஏக்கள் பலரும் “அடுத்த பிரதமர் விஜய்” என்ற முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்களும் வெளியாகின. பிரதமர் பதவிக்கான போட்டியில் விஜய் 9 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தென்னிந்தியாவைத் தாண்டி வடகிழக்கு மாநிலங்களிலும் விஜய்க்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது அரசியல் பேச்சுகள் மற்றும் அறிவிப்புகளை வட மாநில மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தவெக தரப்பில் சமூக வலைதள நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய்யின் முக்கிய பேச்சுகள் மற்றும் அரசியல் அறிவிப்புகள் வட இந்திய மாநிலங்களில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக வெளியிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், வட இந்தியாவைச் சேர்ந்த சில இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களை பயன்படுத்தி விஜய் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நடவடிக்கைகள்தான் தற்போது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்ததுடன், விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்விலும் ராகுல் காந்தி பங்கேற்றதாக அந்த கட்சி தரப்பு சுட்டிக்காட்டுகிறது. மேலும், அடுத்ததாக நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தவெகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் அரசியல் ரீதியாக பலன் பெற முடியும் என காங்கிரஸ் கணக்கு போட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியுடனான விஜய்யின் நட்பை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தரப்பு எதிர்பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போது தவெக தரப்பிலேயே விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையிலான பேச்சுகள் அதிகரித்திருப்பது காங்கிரஸுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற கணக்கில் இருந்த காங்கிரஸ், விஜய்யின் தேசிய அரசியல் நகர்வுகள் காரணமாக எதிர்காலத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மறுபுறம், இந்த சூழல் பாஜகவுக்கு சாதகமாக அமையக்கூடும் என்ற கணக்கும் அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் இளைஞர்களின் அரசியல் எழுச்சி உள்ளிட்ட காரணங்களால் பாஜகவுக்கு சில இடங்களில் சவால் அதிகரிக்கும் பட்சத்தில், தென்னிந்தியாவில் கூடுதல் இடங்களை கைப்பற்றுவது அக்கட்சிக்கு முக்கியமானதாக இருக்கும். தற்போது தென்னிந்தியாவில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசுகள் பல மாநிலங்களில் இருப்பதால், தமிழகத்தில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் உருவானால், அது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தரப்பு கருதலாம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற கோணத்தில் தனித்து போட்டியிட்டால், அதிமுக–பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக சாதகமாக அமையலாம் என அரசியல் கணக்குகள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானாவில் பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஏற்கனவே 'வாரிசு' திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, அப்போதைய தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்திருந்ததை அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகும் பட்சத்தில், பல மாநிலங்களில் மும்முனைப் போட்டி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்முனைப் போட்டி ஏற்பட்டால், வாக்குகள் பல்வேறு அணிகளாகப் பிரியும் சூழல் உருவாகும் என்பதால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையக்கூடும் என்ற அரசியல் கணக்கும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளத்திலும் தவெக தனது அரசியல் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அங்கு விஜய்க்கு ஏற்கனவே கணிசமான ரசிகர் பட்டாளம் இருப்பதால், அது வாக்கு அரசியலாக மாறுமா என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகியுள்ளது.
கேரளத்தில் பாஜகவில் உள்ள சில நிர்வாகிகள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், ரசிகர் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா, தவெக தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உண்மையான அமைப்பு பலத்தை உருவாக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலில் விஜய்யை முன்னிறுத்தும் பேச்சுகள் அதிகரிக்கும் பட்சத்தில், அதன் தாக்கம் காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல்வேறு பிராந்திய கட்சிகளின் அரசியல் கணக்குகளிலும் எதிரொலிக்கலாம். குறிப்பாக தமிழகத்தில் தவெக எடுக்கும் கூட்டணி முடிவு, எதிர்கால மக்களவைத் தேர்தல் அரசியல் சமன்பாடுகளில் முக்கிய திருப்புமுனையாக அமையுமா என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் கேள்வியாக உள்ளது.
English Summary
Vijay for Next Prime Minister Slogans A Shock for Congress a Gain for BJP What is TVK National Political Strategy