'இப்போது உதவாவிட்டால் எப்போது உதவப் போகிறோம்'..? - நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நடிகர் சோனு சூட் கேள்வி...!
If we dont help now when we going help Actor Sonu Sood asks after meeting affected people Nepal
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், பலர் காணாமல் போயும் தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட், “இப்போது நாம் உதவாவிட்டால், வேறு எப்போது உதவப் போகிறோம்?” என்று உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவை தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியதுடன், பாறைகள், மண், சேறு, சகதி ஆகியவற்றையும் அடித்துச் சென்றது. இதனால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் சிக்கிக் கொண்டனர்.
உயிரைக் காப்பாற்ற பலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியபோதிலும், பெருக்கெடுத்த வெள்ளம் பலரை அடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பேரிடரில் இதுவரை 1,127 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், பேரிடர் ஏற்பட்டு 6 நாட்கள் கடந்துள்ளதால் காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.இதற்கிடையே நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவில் வளாகத்தில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.பலரின் உடல்கள் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட சோனு சூட், அங்கு பொதுமக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்ததுடன், தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.மேலும், நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோனு சூட், நேபாளத்திற்கான மீட்புப் பணிகளில் இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டினார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும்போது, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பது தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“இப்போது நாம் அவர்களுக்கு உதவாவிட்டால், வேறு எப்போது உதவப் போகிறோம்?” என்று உருக்கமாக கேள்வி எழுப்பிய அவர், அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் நேபாள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.சூட் அறக்கட்டளை சார்பிலும் நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
“சூட் அறக்கட்டளை அமைப்பிடம் இருந்து உங்களுக்கு எந்த வகையான உதவி தேவைப்பட்டாலும், அதை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.பேரழிவின் பிடியில் சிக்கியுள்ள நேபாள மக்களுக்கு உலக நாடுகளும், சமூக அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சோனு சூட்டின் நேரடி களப்பணி கவனம் பெற்றுள்ளது.
English Summary
If we dont help now when we going help Actor Sonu Sood asks after meeting affected people Nepal