காவல்துறைக்கு 29,108 புதிய பணியிடங்கள் & ரூ.1 கோடி நிவாரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் புதிய அறிவிப்புகள்
Key Assembly Announcements Major Police Department Upgrades and Compensation Boost Unveiled
சட்டமன்றத்தில் காவலத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தின் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும், காவல்துறையின் கட்டமைப்பு மற்றும் காவலர்களின் நலனை உறுதியாக்கவும் பல்வேறு புதிய தொலைநோக்கு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
காவல் நிலையங்களின் பணிச்சுமையைக் குறைத்து, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் காவல் துறையில் புதிதாக 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமூகத்தைப் சீரழிக்கும் போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், போதைப்பொருள் இல்லாத 50 சிறந்த கிராமங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பும் வெளியானது.
தொழில்நுட்ப ரீதியாகவும் உள்கட்டமைப்பு ரீதியாகவும் காவல்துறையைப் பலப்படுத்த ரூ.212 கோடி நிதி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவலர்களின் உடல்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.23 கோடி மதிப்பீட்டில் நவீன உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகள் அமைத்துத் தரப்படும்.
காவலர்களின் தியாகத்தையும் பணியையும் கௌரவிக்கும் வகையில், பணியின் போது பெரும் துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் வீரமிக்க காவலர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, பணிக்காலத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவல்துறையை நவீனப்படுத்துவதோடு, பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.
English Summary
Key Assembly Announcements Major Police Department Upgrades and Compensation Boost Unveiled