சென்னை மக்களே ரெடியா? வருகிறது அரிதான முழு சந்திர கிரகணம்!
lunar eclipse 7 sep 2025
வரும் செப்டம்பர் 7 அன்று இரவு, அரிதான முழு சந்திர கிரகணத்தை சென்னை மக்கள் வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் வந்தபோது, பூமி சூரிய ஒளியை மறைத்ததால் சந்திரன் சிவப்பாகத் தோன்றும் நிகழ்வு. இதையே ‘ரத்த நிலவு’ என்றும் அழைப்பார்கள்.
இந்நிகழ்வு இரவு 8.58 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 8 அதிகாலை 2.25 மணி வரை நீடிக்கும். குறிப்பாக இரவு 11.41 மணிக்கு சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் மூழ்கும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு வானத்தை நோக்கி பார்த்தால் இதை தெளிவாகக் காணலாம்; எந்த கருவிகளும் தேவையில்லை.
கிரகணம், சந்திரன் பூமியின் லேசான நிழலான பெனும்பிரலில் நுழைவதிலிருந்து தொடங்கும். இந்த கட்டத்தை தொலைநோக்கி மூலம் மட்டுமே தெளிவாகக் காணலாம். பின்னர் பூமியின் இருண்ட நிழலான அம்ப்ரா சந்திரனை மூடத் தொடங்கும். முழுமையாக மூடப்படும் போது சந்திரன் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும், இதுவே முழு சந்திர கிரகணம்.
இந்த நிகழ்வு இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை உலகின் பல பகுதிகளில் – ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் துருவப் பகுதிகளில் காணப்படும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026 மார்ச் 3 அன்று நடைபெறும். ஆனால் அதைப் இந்தியாவில் முழுமையாகக் காண முடியாது; ஒரு பகுதி மட்டுமே தெரியும். காரணம், அந்நேரத்தில் கிரகணம் முடியும் தருவாயில்தான் இங்கு சந்திரன் உதிக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், “இம்முறை கிரகணம் இந்தியாவில் சிறப்பாகக் காணப்படும் அபூர்வ வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.