சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்.. போராட்டம் நடத்த அதிமுக உரிமை மீட்பு குழு முடிவு! - Seithipunal
Seithipunal


 குடிநீர் விநியோகம் செய்வதை பொதுப்பணித்துறை உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தபடும்  என அதிமுக உரிமை மீட்பு குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்திசேகர் அவர்களின் அறிக்கையில் கூறியிருப்பதாவது .பாதுகாக்கப்பட்ட குடிநீா் வீடுகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக, கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் குடிநீா் இணைப்பு என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது, கிராமப்புறங்களில் 3.23 கோடி குடிநீா் இணைப்புகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. அது தற்போது, 15.50 கோடி இணைப்புகளாக உயா்ந்துள்ளதாக மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசால் செயல்படுத்தப் படும் இந்த திட்டம் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 12.34 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

புதுவை,அருணாசல பிரதேசம் உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 100%வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் தகவல்கள் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் குடிநீரின் தரம் நன்றாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே புதுச்சேரி மக்கள் தெரிவிப்பார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் குடிநீரில் அதிக அளவு உப்பு சேர்ந்து பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு குடிநீரின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
குடிநீர் பயன்பாடு இல்லாவிட்டாலும் குளித்தல் உள்ளிட்ட இதர தேவைகளுக்கு நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது ஆனால் தற்போது குடிநீர் தரம் மிகவும் மோசமாகி எந்த பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நகரப் பகுதிகளில் குறிப்பாக நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட குயவர்பாளையம் சக்தி நகர்,DR நகர் அண்ணா நகர்,பெரியார் நகர் நெல்லிமா நகர் TDS அளவு 2000 ஆகவும் 
நவீனா கார்டன், பகத் சிங் தெரு,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீதிஉள்ளிட்ட பகுதிகளில் TDS அளவு புதுச்சேரியிலேயே அதிகபட்சமாக 4000 வரை உள்ளது.
குடிநீருக்கு 100-500 mg/l அளவில் TDS இருக்க வேண்டிய நிலையில் TDS அதிகரித்து இருப்பது மிகவும் அபாயகரமானது.

புதுச்சேரி மாநிலத்தில் TDS அளவு  குடிநீரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை உபயோகப்படுத்தும் பொதுமக்களுக்கு பலவித தோல் சம்பந்தமான நோய்களும் உடல் பாதிப்புகளும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில் மினரல் வாட்டர் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் புதுச்சேரியில் நகரப் பகுதியில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மிக முக்கியமான மக்கள் நலம் சார்ந்த இந்த பிரச்சனையை பொதுப்பணித்துறை 
உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உண்டாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unhygienic drinking water supply The AIADMK rights recovery group has decided to protest


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->