#கள்ளக்குறிச்சி:: டவாலி.. "இங்க வா.. ஷூ எடுத்துட்டு போ".. மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு..!!
Kallakurichi collector called Dawali and asked him to take shoes
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் இந்த கோயிலில் வழிபடுவது வழக்கம்.
அதன்படி வரும் ஏப்ரல் 28ம் தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்திருந்தார்.

அப்பொழுது கூத்தாண்டவர் கோவிலுக்குள் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் தனது ஷூவை கோயிலுக்கு வெளியே கழட்டினார். அப்பொழுது உதவியாளராக இருக்கும் டவாலியை சைகை மூலம் அழைத்த அவரின் ஷூவை எடுத்துச் செல்லும்படி கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியவாறு டவாலி கூட்டத்தில் நடுவில் இருந்து வேகமாக ஓடி வந்து மாவட்ட ஆட்சியரின் ஷூவை கையால் எடுத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு சென்றார். இந்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் டவாலியை அழைத்து தனது ஷூவை சைகை மூலம் அழைத்து எடுத்து செல்லும்படி கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் காலணியை உதவியாளர் கைகளில் எடுத்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதிக்கு சென்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியின் காலணியை திமுக தொண்டர் ஒருவர் கைகளால் கழட்டி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kallakurichi collector called Dawali and asked him to take shoes