வட தமிழகத்தின் இந்திய விடுதலை போரட்ட வீரர்கள்.! மறைக்கப்படும் தியாகிகளை போற்றுவோம்.! - Seithipunal
Seithipunal


பாமகவை சேர்ந்த அருள் இரத்தினம் விடுத்துள்ள சுதந்திரதின முகநூல் பதிவில்...,

தமிழ்நாட்டில் தியாகங்கள் அவரவர் தியாகத்தால் மதிப்பிடப்படுவது இல்லை. சுதந்திரப் போரில் தியாகம் செய்தோர் வரிசையில்,  தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை சாந்தோர் மட்டுமே மிகப்பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளனர். (சில வரலாறுகள் வெறும் கற்பனையாகக் கூட கட்டமைக்கப்பட்டுள்ளது). ஆனால், வட தமிழ்நாட்டின் மாபெரும் தியாகிகள் தொடர்ந்து மறைக்கப்படுகிறனர்.  

தமிழக அரசில் சுதந்திர தினம், குடியரசு தினம் விழாக்களை ஒருங்கிணைக்கும் இடத்தில் உள்ள ஒரு அதிகாரி, 'வடதமிழ்நாட்டில் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் எவரும் இல்லை' என்கிற கருத்தை கொண்டிருக்கிறார். 

அண்மையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி, வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நாடக நிகழ்ச்சி 21ஆம் தேதி மதுரையிலும்,15ஆம் தேதி ஈரோட்டிலும், 22ஆம் தேதி திருச்சியிலும், 28ஆம் தேதி கோவையிலும் நடைபெறுகிறது.  

இதேபோன்று, அஞ்சலை அம்மாள் போன்ற வடதமிழ் நாட்டின் தியாகிகளை போற்றும் நாட்டிய நாடகம் எதுவும் இங்கே ஒருபோதும் நடக்காது! 

வரலாறு எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களை தான் கொண்டாடும். அதிகாரம் இல்லாதவர்களின் தியாகம் ஒருபோதும் மதிக்கப்படாது என்பதற்கு வடதமிழ்நாட்டின் தியாகிகள் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். மறைக்கப்படும் வடதமிழ்நாட்டு தியாகிகளை நாம்தான் கொண்டாட வேண்டும்.

"ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் வரலாற்று நாயகர்கள்"

1. நாகப்பன் படையாட்சி (இறப்பு 1909)
தென் ஆப்பிரிக்கா, இந்தியா, அமெரிக்கா என பல நாடுகளில் உரிமைப் போருக்கு வழிவகுத்த, மகாத்மா காந்தி உருவாக்கிய சத்தியாகிரப் போரில் உயிர்நீத்த முதல் தியாகி. இவரது பெயரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாளிகைக்கு சூட்ட வேண்டும். மயிலாடுதுறையில் சிலை அமைக்க வேண்டும். (பிறந்த ஊர்: மயிலாடுதுறை பகுதி, இறந்தது ஜொகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா)

2. ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா (1874 – 1964)
கவிஞர், போராளி, பத்திரிகையாளர், சுதந்திரப் போரில் அகிம்சைப் போராட்டம், தீவிரவாதப் போராட்டம் என எல்லாவற்றிலும் பங்கேற்றவர். சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இவருக்கான நினைவுச்சின்னம் அமைய வேண்டும். (பிறந்த ஊர்: சேலம்)

3. சர்தார் பு.மு. ஆதிகேசவ நாயகர் (1898 – 1964)
இந்திய சுதந்திர போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். வரிகொடா இயக்கத்தில் பங்கேற்றதால், சென்னையில் இருந்த பல கோடி மதிப்பிலான சொத்துகளை இழந்தவர், மகாத்மா காந்தியால் சர்தார் என்று பட்டம் சூட்டப்பட்டவர். சென்னையில் இவருக்கான நினைவுச்சின்னம் அமைய வேண்டும். (பிறந்த ஊர்: சென்னை கொருக்குப்பேட்டை)

4. அஞ்சலை அம்மாள் (1890 - 1961)
1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி. சுதந்திர போருக்காக குடும்ப சொத்துக்களை, நிலத்தை விற்றவர். வயிற்றில் குழந்தையுடன் சிறை சென்றவர். தனது ஒன்பது வயது மகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி சிறையில் அடைக்கப்பட்டவர். மகாத்மா காந்தியால் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர். (பிறந்த ஊர்: கடலூர்)

5. ஜமதக்னி (1903 - 1981)
இந்திய சுதந்திர போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை முதலில் மொழி பெயர்த்தவர். இவரது பெயரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மாளிகைக்கு சூட்ட வேண்டும். (பிறந்த ஊர்: வேலூர் மாவட்டம், கடப்பேரி)

6. செவாலியர் செல்லான் நாயகர் (1884 – 1965).
புதுச்சேரியின் விடுதலைக்கும், அதன் இந்திய இணைப்புக்கும் முதன்மை காரணமாக இருந்தவர். புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிக்காக துப்பாக்கியால் சுடப்பட்டவர். இவருக்கான நினைவுச்சின்னத்தை புதுச்சேரி அரசு அமைக்க வேண்டும். (பிறந்த ஊர்: புதுச்சேரி, காலப்பட்டு).

குறிப்பு: வடமாவட்ட பட்டியலில் இன்னும் பல தியாகிகள் இருக்கிறார்கள். முதன்மையான மிகச்சிலர் பெயரை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian freedom fighters of North Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->