திருவேற்காடு கோவிலில் இராஜகோபுரம் மண்டபங்கள் அமைக்கும் பணி..அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!  - Seithipunal
Seithipunal


திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் அமைக்கும் பணிகளுக்கு  அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் கருவறை வாசற்கால் நிறுவுதல், ரூ.17.47 கோடி  மதிப்பீட்டில் 3 புதிய இராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். 

அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருக்கோயில் நிதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் கட்டும் பணிகளும், ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவாக்கப் பணிகளும், ரூ.42 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உபயதாரர் நிதியில் ரூ.12 கோடியில்  உபசன்னதிகள் கிழக்கு முன் மண்டபம், கொடி மர மண்டபம், யாகசாலை மண்டபத் திருப்பணிகளும் ரூ.5.47 கோடி மதிப்பீட்டில் மேற்கு ஐந்து நிலை இராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கு மூன்று நிலை இராஜகோபுரங்கள்  அமைக்கும் பணிகளும்  நடைபெற்று வருகின்றன.
 
இன்று கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவுதல், 3 புதிய இராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தோம். இத்திருக்கோயில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்திடும் வகையிலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை அடிப்படையாய் கொண்டும் கட்டமைப்பு வசதிகள் கருங்கல் கட்டுமானப் பணிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.
 
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 57.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாற்று மலைபாதை, சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிக்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை ரூ.1,007 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உபயதாரர்கள் ரூ.1,323 கோடி அளவிற்கு திருப்பணிகளை  செய்து தருகின்றனர்.இதுவரை 2,880 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.வரும் ஜுலை மாதத்திற்குள் 3,000 திருக்கோயில்களின் குடமுழுக்கை கடக்கும் என்று தெரிவித்தார்.
 
இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் டெக்கான் என். கே. மூர்த்தி,  இணை ஆணையர் ஆ.அருணாசலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா.கோவிந்தசாமி, பா.சாந்தகுமார், பி.ஏ.சந்திரசேகர செட்டி, க.வளர்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Construction of Rajagopuram Mandapas in Thiruverkadu Temple Ministers lay the foundation stone


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->