கடலூர் மாவட்ட முழு அடைப்பு வெற்றி! மக்கள் உணர்வை இனியாவது தமிழக அரசு மதிக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
Dr Anbumani Ramadoss Say PMK Cuddalore Strike 2023
கடலூர் மாவட்ட முழு அடைப்பு வெற்றி அடைந்துள்ளதாகவும், என்எல்சி விவகாரத்தில் மக்கள் உணர்வை இனியாவது தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை ஏவி நிலங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. என்.எல்.சியால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருக்கிறது; தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மக்கள் எதிர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே இந்த வெற்றிக்கு காரணமாகும்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்களை கையகப்படுத்தித் தருவதில் கடலூர் மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அடுக்கடுக்காக துரோகங்களை செய்து வருகிறது. மக்களைக் காப்பது தான் அரசின் பணி என்ற அடிப்படைத் தத்துவத்தை மறந்து என்.எல்.சிக்கும், அதை அடுத்த சில ஆண்டுகளில் கையகப்படுத்திக் கொள்ளப் போகும் தனியார் பெரு நிறுவனத்திற்கும் ஆதரவாக, அப்பாவி உழவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, அவர்களின் நிலங்களை பறித்து வருகிறது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்தப் போக்கையும், தமிழர்களுக்கு எதிரான என்.எல்.சி நிறுவனத்தையும் கண்டித்து தான் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 48 மணி நேர இடைவெளியில் அறிவிக்கப்பட்ட போராட்டம் தான் என்றாலும், அது இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு எவ்வகையிலும் தடையாக அமையவில்லை. காரணம்... என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறல்கள், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறை, தமிழ்நாடு அரசின் துரோகம் ஆகியவற்றுக்கு ஏதேனும் வகையில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும், வணிகர்களும் நீண்டகாலமாகவே துடித்துக் கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டத்தின் நலனுக்காக உண்மையான அக்கறையுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டவுடன் அனைத்துத் தரப்பினரும் பா.ம.க.வின் பின் திரண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காவல்துறை தலைவர் (ஐ.ஜி), இரு காவல்துறை துணைத்தலைவர்கள் (டி.ஐ.ஜி), 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர்கள் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தார்கள். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார். முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டார். அமைச்சரின் உறவினர்கள், உதவியாளர்கள், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடைகளை திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். கடைகளை மூடினால் வரி ஏய்ப்பு செய்ததாக பொய் வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டினர். ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் வணிகர்கள் அஞ்சவில்லை.

உண்மையில், அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட அமைச்சரின் தொகுதியான குறிஞ்சிப்பாடியில் தான் முழு அடைப்பு முழுமையாக இருந்திருக்கிறது. அமைச்சரின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை. விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர் உட்பட கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன. அனைத்து வணிகர்களும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்ததையே இது காட்டுகிறது.
கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும் கூட அவற்றில் பயணம் செய்வதற்கு பயணிகள் எவரும் முன்வரவில்லை. அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எவ்வளவு தான் ஏவினாலும் நியாயத்தையும், நீதியையும் மறைக்க முடியாது என்பதற்கு கடலூர் மாவட்ட முழு அடைப்பின் வெற்றியே எடுத்துக்காட்டு.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்கள் பறிக்கப்படுவதாலும், என்.எல்.சியால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் எழுச்சியையும், கொந்தளிப்பையும் அரசு அதிகாரத்தையும், அடக்குமுறையையும் கொண்டு அடக்கி வைக்க முடியாது. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து என்.எல்.சிக்காக விளைநிலங்களை பறிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்.எல்.சியின் பிடியிலிருந்து கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் மீட்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஓயாது; மேலும் தீவிரமடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்.எல்.சியின் சீர்கேடுகள் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றல்ல. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினை ஆகும். எனவே, அரசியல் வேறுபாடுளைக் கடந்து அனைத்து அரசியல்கட்சிகள், அனைத்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஒன்று பட்டு என்.எல்.சிக்கு எதிராக போராட வேண்டும்; மண்ணையும், மக்களையும் காக்க அர்ப்பணிப்புடம் போராட முன்வர வேண்டும்.
கடலூர் மாவட்ட முழு அடைப்பு முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளித்த வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும், உழவர் பேரியக்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி இராமதாஸ் தெரிதவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say PMK Cuddalore Strike 2023