#திருச்சி || வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரெங்கநாதபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் பரம தயாளன் என்பவரின் மகன் பிரபாகரன் என்பவர் துறையூர் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். அவர் பணியாற்றி வரும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் மலையடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செம்மண் திருடி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் தடுப்பதற்காக துறையூர் வட்டாட்சியர் வனஜா வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நேரடியாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து வட்டாட்சியரின் உத்தரவின் பேரில் தனி ஆளாக விரைந்து சென்ற பிரபாகரன் நரசிங்கபுரம் டைல்ஸ் பிள்ளையார் கோவில் அருகே எதிரே வந்த ஜேசிபி வாகனத்தை மறித்து வாகனத்திலிருந்து சாவியையும், வாகன ஓட்டுனர் கந்தசாமியின் செல்போனை எடுத்துக் கொண்டு செம்மண் திருடப்படுவதாக சொல்லப்பட்ட மலையடி வாரம் பகுதிக்கு தன் வாகனத்தில் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி வாகன உரிமையாளர் தனபால், அவர்களுடைய உதவியாளர் மணி ஆகியோர் வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது மணி என்பவர் வருவாய் ஆய்வாளர் பின் கழுத்தில் கடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட வருவாய் துறையினர் விரைந்துள்ளனர்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் தப்பிச் சென்றதால் வருவாய் துறையினர் அவரை மீட்டு பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்த பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவில் அனுமதித்தனர்.

இதற்கிடையே வருவாய் துறையினர் வருவாய் ஆய்வாளரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்ற நேரத்தை பயன்படுத்தி தங்களிடமிருந்த மாற்றுச்சாவியை பயன்படுத்தி செம்மண் திருட்டில் பயன்படுத்திய வாகனங்களை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் சென்றனர்.

செம்மண் திருட்டை தடுக்கச் சென்ற வருவாய்துறை அதிகாரியை திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் இரவில் தாக்கிய சம்பவம் துறையூர் பகுதியிலும், வருவாய் துறை ஊழியர்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில் நரசிங்கபுரம் கிராம திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி டிரைவர் தனபால் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Panchayat president arrested for assaulting revenue inspector


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->