அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? அஜித்குமார் கொலை வழக்கில் பூகம்பத்தை கிளப்பும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin ajithukumar case
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல் துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக திமுக அரசு இருந்துள்ளது. அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது.
சொந்த மக்களையே படுகொலை செய்யும் திமுக அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன்மீது படிந்திருக்கும் ரத்தக் கறையை போக்க முடியாது. கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம். அந்தக் குற்றத்தை ஆளும் திமுகவே செய்திருக்கிறது.
சிவகங்கை திமுக மாவட்ட நிர்வாகி சேங்கை மாறன் தலைமையிலான குழுவினர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி ரூ.50 லட்சம் வரை பணம் கொடுப்பதாகவும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் பேரம் பேசியிருக்கிறார். இந்த விவரங்கள் உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் எந்த நேரமும் அஜித்குமாரின் வீட்டிலேயே முகாமிட்டிருந்து, அங்கு வரும் யாரிடனும் சுதந்திரமாக பேச முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பாமகவின் பொருளாளரும் பல வகைகளில் தடுக்கப்பட்டிருக்கிறார். கொலை குற்றத்தை மறைக்க திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது தமிழக காவல துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகாரம் படைத்தவர்களின் கூலிப்படையாக காவல் துறை செயல்பட அனுமதித்தது, அப்பாவி இளைஞர் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்தது, கொலையை மறைக்க முயன்றது என ஏராளமான தவறுகளையும், குற்றங்களையும் செய்த தமிழக அரசு, இப்போது இளைஞர் குடும்பத்துக்கு சில உதவிகளை செய்து அனைத்தையும் மூடி மறைக்க துடிக்கிறது. இது நடக்காது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது படிந்துள்ள ரத்தக் கறை ஒருபோதும் விலகாது. அப்பாவி இளைஞரை அடித்து விசாரணை நடத்த தூண்டிய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இதில் தொடர்புடைய காவல் துறை உயரதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் தவிர ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக மக்களுடன் மனிதநேயத்துடன் பழகுவது எப்படி என்பது குறித்து காவல் துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin ajithukumar case