தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக்குக்கு அவரது சொந்த ஊரில் சிலை.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று தமிழக அரசு விடுத்துள்ள அறியவிப்பில், "தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, "கர்னல் ஜான் பென்னிகுயிக்" அவர்களின் புதிய சிலையை, அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன் - கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். 

ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்து , தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்.  

அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன.  இம்மாவட்டங்களில் தற்போது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.  ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையோடும், மனஉறுதியோடும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்ட பெரியாறு அணையை கட்டி முடித்துள்ளார்.  

அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 - ஆம் நாளை தமிழர்கள் விமர்சிக்கின்றனர். தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் தியாக பணிகளை நினைவுகூறும் வகையில் அவரது பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.  மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.  

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மதுரை , தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகர பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக் அவர்களின் பெயர் சூட்டியுள்ளது. 

தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், ஒன்றிய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துக்களை தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pennycuick mullaiperiyardam cmmkstalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->