காதலி குடும்பத்தை கவர கார் மோதல் நாடகம்…! சினிமாவை மிஞ்சிய காதல் குற்றம்...! - Seithipunal
Seithipunal


காதலில் வெற்றி பெற பலரும் விதவிதமான யுக்திகளை கையாளுவது வழக்கமான விஷயம்தான். குறிப்பாக ஆண்கள் என்றால், காதலிக்கும் பெண்ணின் மனதை மட்டுமல்லாமல், அவளது குடும்பத்தினரின் ஆதரவும் அன்பும் கிடைத்தால்தான் காதல் நிறைவேறும் என்று நம்புவார்கள்.

ஆனால் கேரளாவில் நடந்த ஒரு சம்பவம், இந்த எண்ணத்தை அதிர்ச்சி அளிக்கும் சினிமா பாணி திட்டமாக மாற்றியுள்ளது.கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம், கோன்னி மம்மூத்து பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ராஜன் (24) என்பவர், ஒரு இளம்பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய போதும், அவர் அதற்கு பெரிதாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரஞ்சித் ராஜன், பெண்ணின் குடும்பத்தினரை கவர்ந்தால் காதல் தானாகவே வெற்றி பெறும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அந்த திட்டத்தின் உச்சமாக, ஒரு போலி விபத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். தனது காதலி விபத்தில் சிக்கியதாக காட்டி, தானே மீட்பாளராக மாறி, குடும்பத்தினரிடம் ‘ஹீரோ’வாக உருவெடுப்பதே அவரது திகிலூட்டும் திட்டமாக இருந்தது.இந்த விபத்து நாடகத்திற்கு, தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியைச் சேர்ந்த அஜாஸ் (19) என்பவரையும் ரஞ்சித் ராஜன் உடந்தையாக்கினார்.

விபத்து எங்கே, எப்படி நடக்க வேண்டும், யார் எந்த வாகனத்தில் வர வேண்டும் என முழு திட்டமும் முன்கூட்டியே வகுக்கப்பட்டது.திட்டமிட்டபடி, கடந்த மாதம் 23-ம் தேதி, ரஞ்சித் ராஜனும் அஜாஸும் வெவ்வேறு கார்களில் பயணித்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித் ராஜனின் காதலியை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்தார்.

பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதியில், அந்த இளம்பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதச் செய்து, விபத்தை திட்டமிட்டு ஏற்படுத்தினார்.மோதலின் வேகத்தில் அந்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவரது கை உள்ளிட்ட உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குப் பிறகு, அஜாஸ் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சில நிமிடங்களிலேயே, “தற்செயலாக” மற்றொரு காரில் வந்தது போல ரஞ்சித் ராஜன் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.ஆனால் இந்த விபத்து, போலீசாருக்கு விரைவிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் ஓட்டுநரை கண்டுபிடித்த போலீசார், அது அஜாஸ் என்பவரின் கார் என உறுதி செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித் ராஜனுடன் உள்ள நட்பு உறவு வெளிச்சத்துக்கு வந்தது.மேலும், விபத்து நடந்த உடனே ரஞ்சித் ராஜன் சம்பவ இடத்துக்கு வந்த விதம் போலீசாருக்கு கேள்விகளை எழுப்பியது. இதனால் இது தற்செயல் விபத்து அல்ல, திட்டமிட்ட நாடகமா? என்ற சந்தேகம் வலுப்பெற்றது.

அஜாஸும், ரஞ்சித் ராஜனும் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்த விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில்கள் அளித்த இருவரும், இறுதியில் விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும், காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் அளவுக்கு விபத்தை நாடகமாக நடத்த முயன்ற இந்த சம்பவம், கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

staged car crash impress girlfriend family love crime that surpasses movies


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->