ஏ.ஆர். ரஹ்மானின் மகளுக்கு ரஹ்மானிடம் பிடிக்காத விஷயம் இதுதான்! இசைப்புயல் பற்றி கதிஜா பகிர்ந்த ரகசியம்!
This is what AR Rahman daughter doesnot like about Rahman Khadija secret about the musical storm
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ரஹ்மான், ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட சர்வதேச அளவிலான பல விருதுகளை வென்று இந்திய இசையை உலக அரங்கில் உயர்த்தியவர். புகழின் உச்சத்தில் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையை அமைதியாகவும் எளிமையாகவும் வாழ விரும்பும் குணம் கொண்டவராகவே அவர் அறியப்படுகிறார்.
இசை உலகில் மாபெரும் வெற்றிகளை குவித்த ரஹ்மானின் வாழ்க்கை எப்போதும் சீரானதாகவே இருந்ததில்லை. இளம் வயதில், குறிப்பாக 25 வயதில், அவர் கடும் மனஅழுத்தத்தையும் விரக்தியையும் சந்தித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தற்கொலை பற்றிய எண்ணங்கள் கூட அவரை வாட்டியதாக அவர் முன்பே கூறியிருக்கிறார். காதல் தோல்விகள் காரணமாக, திருமணத்திற்கு முன்பு தன்னை “LFA – Love Failures Association” என்ற நகைச்சுவையான சொற்றொடரால் குறிப்பிட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் பெரும்பாலும் நள்ளிரவில் இசை அமைப்பதை விரும்புவார். இரவு நேர அமைதி தான் அவருக்கு அதிக படைப்பாற்றலை அளிக்கும் என்று நம்புகிறார். ஆனால், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்காக அவர் தனது இந்த பழக்கத்தையும் மாற்றிக் கொண்டார். காலையில் பாடுவது சிறந்தது என்று லதா நம்பியதால், அவருக்காக காலை நேர ரெக்கார்டிங்கிற்கும் ரஹ்மான் சம்மதித்தார். இது லதா மங்கேஷ்கரின் மீது அவர் வைத்திருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது.
திரையுலகில் ரஹ்மானின் பயணத்தை மாற்றிய முக்கிய நபர் இயக்குநர் மணிரத்னம். ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் அவருக்கு வாய்ப்பு வழங்கிய மணிரத்னத்திற்கு ரஹ்மான் எப்போதும் நன்றியுள்ளவராக இருக்கிறார். மணிரத்னம் அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருப்பேன் என்று ரஹ்மான் பலமுறை கூறியுள்ளார்.
பிறப்பால் இந்துவாக இருந்த ரஹ்மான், பின்னர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இதில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால், அவரது இயற்பெயர் திலீப் குமார். இதே பெயரில் புகழ்பெற்ற நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். மேலும் இருவரின் மனைவிகளின் பெயரும் சைரா பானு என்பதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவலாக உள்ளது.
ரஹ்மானுக்கு இனிப்புகள் மிகவும் பிடிக்கும். அவர் குடிக்கும் காபியில் கூட அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டால்தான் விருப்பமாக குடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், அவரது மகள் கதிஜாவுக்கு, பள்ளிக்கு அவரது தந்தை வந்து ஆட்டோகிராஃப் போடுவதோ, கவனம் பெறுவதோ பெரிதாக பிடிக்காதாம். அதனால், “அப்பா பள்ளிக்கு வர வேண்டாம்” என்று எச்சரித்த சம்பவங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தாலும், வாழ்க்கை அனுபவங்களால் செதுக்கப்பட்ட ஒரு மனிதராகவே ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
This is what AR Rahman daughter doesnot like about Rahman Khadija secret about the musical storm