'கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா.? என ஓலமிட்ட இ பிஎஸ், திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தைப் பார்த்து ஒப்பாரி வைக்கிறார்'; அமைச்சர் ரகுபதி..! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை என 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இத்திட்டம் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்த பழனிசாமி, 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர்.திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திகு திகு என எரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அன்புமணி சேர்ந்த போது, ’’வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி அன்புமணி கூட்டணி மாறிக் கொண்டிருக்கிறார்’’ என விமர்சித்த பழனிசாமிதான், இன்றைக்கு வேடந்தாங்கலில் அன்புமணியோடு ஐக்கியமாகியிருக்கிறார்.

கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா? என ஓர் ஆண்டுகாலமாக ஓலமிட்டுக் கொண்டிருந்த பழனிசாமிக்கு, திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நினைவுக்கு வந்து, ஒப்பாரி ஓலமிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் எனும் தொலைநோக்கோடு மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயலாற்ற 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' எனும் புதுமையான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தன்னார்வலர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சந்தித்து அவர்களின் கனவுகளைக் கேட்டறிய உள்ளனர். அவர்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதை அரசு இலக்காக வைத்துச் செயல்பட உள்ளது. ஆனால் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் எப்பொழுதும் அமித்ஷா காலடியில் கிடக்கும் அடிமைக் கனவோடே வாழும் பழனிசாமி இந்தத் திட்டத்தைப் பற்றி ஆதாரமற்ற அரைவேக்காட்டுத்தனமான அவதூற்றைக் கக்கியிருக்கிறார்.

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் வரவேற்பை பெறும் போது, அதிலும் தனக்கு ஸ்கோர் கிடைக்குமா? எனப் பாய்ந்து வந்து, புகுந்து கொள்வார். எப்படி லேப் டாப் திட்டம், பொங்கல் பரிசுத் தொகுப்பு எனத் தன்னை இணைத்துக் கொண்டாரோ அது போல!

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்து, மக்களின் கனவைத்தான் கேட்கிறது. அதன்பிறகுதான் அது திட்டமாகச் செயல்வடிவம் பெறும். கனவைக் கேட்டதற்கே பழனிசாமி ஏன் அலறுகிறார்? ஆகாயத்திற்கும் வானத்திற்கும் குதிக்கிறார்? 

ஆட்சி முடியும் நேரத்தில், கனவைச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்களே எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பழனிசாமி. 2021-ல் ஆட்சி முடியும் நேரத்தில் குறைகளை அரசுக்குத் தெரிவித்துத் தீர்வு காணும் 1100 எண் தொலைப்பேசி சேவை திட்டத்தைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 10 நாள் முன்பு பழனிசாமி கொண்டு வந்தாரே... அது கடைந்தெடுத்த கபட வேலை இல்லையா? 2021 தேர்தல் தேதி அறிவிப்புக்கு இரண்டு நாள் முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது பழனிசாமியின் உதடுகள்தானே! மினி கிளினிக் தொடக்கம், 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், வன்னியர் உள் ஒதுக்கீடு என எத்தனை குட்டிக்கரணங்களைத் தேர்தல் நேரத்தில் பழனிசாமி அடித்தார்? 

மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்தவர், திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை முதல்வர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ தெரிவித்து மனுக்கள் மீது உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட்ட திட்டம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொடர்புத் திட்டம் மகத்தான வரவேற்பை பெற்றது. அப்படி மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட திட்டம் எப்படி வெற்றி பெற்றதோ அதேப்  போல 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்களிடம் செல் என்றார். அவரின் கொள்கையை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் திமுக அரசு, 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை செயல்படுத்துவதற்காக மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. மக்களைவிட்டு எப்போதுமே எட்டி நிற்கும் எடப்பாடிக்கு இந்த திட்டம் எட்டிக்காயாகத்தான் இருக்கும்!

அடிமை ஆட்சி நடத்திய பழனிசாமியின் அருவருப்பான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் கொடுங்கனவுக்கு ஆளான அவலநிலையை மாற்றி, மக்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியிருப்பது திராவிட மாடல் ஆட்சிதான்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்களின் எண்ணம் அறிந்து செயலாற்றும் அரசு, அவர்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசு, இன்று தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் திட்டம் தீட்டியிருக்கிறது. திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்குப் பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும். அதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும். அடுத்த முதல்வர் நான்தான் என்ற பழனிசாமியின் கனவு மட்டும் எப்போதும் காணல் நீராகத்தான் இருக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Raghupathi says that EPS is lamenting after seeing the DMK governments Tell Us Your Dream scheme


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->