வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து 03 மாவட்ட ஆட்சியர்களுடன் கோவை ஆட்சியர் அலுவகத்தில் நாளை ஆலோசனை..!
A discussion regarding SIR will be held tomorrow at the Coimbatore Collectors office with the Collectors of 03 districts
பீஹாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் இறந்த வாக்காளர்கள் உள்பட 6½ லட்சம் பேர் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாமில் 65 ஆயிரம் பேர் புதிதாக பெயர் சேர்க்க கோரி படிவம்-6 அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுதவிர 31 ஆயிரம் பேர் திருத்தங்கள் கோரி படிவம்-8 அளித்த்தோடு, இந்த படிவங்கள் மீது தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள கோவை மண்டல சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி பார்வையாளரும், மத்திய அரசின் இணை செயலாளருமான குல்தீப் நாராயன் இன்று கோவை வந்தடைந்தார். அவர், நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளார்.
English Summary
A discussion regarding SIR will be held tomorrow at the Coimbatore Collectors office with the Collectors of 03 districts