திரௌபதி 2 படத்தில் இருந்து சின்மயி பாடிய பாடல் நீக்கம் – சின்மயி குரலே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த மோகன் ஜி!
Chinmayi song removed from Draupadi 2 Chinmayi voice is not wanted Mohan Ji takes a drastic decision
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரௌபதி 2 திரைப்படத்தில் சின்மயி பாடிய “எம்கோனே” பாடல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு, சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திரௌபதி 2 உருவாகியுள்ளது. 14ஆம் நூற்றாண்டு பின்னணியில், ஹொய்சால அரசர்களின் ஆட்சி, முகலாய படையெடுப்பால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற “எம்கோனே” என்ற பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார். பாடல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சின்மயி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “இந்த பாடல் மோகன் ஜி இயக்கும் படம் என்று முன்பே தெரிந்திருந்தால், நான் இதை பாடி இருக்க மாட்டேன். அவரது சித்தாந்தங்கள் என்னுடைய கருத்துகளுக்கு முற்றிலும் முரணானவை” என பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பாடலுக்காக மனமார்ந்த மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார்.
சின்மயியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த இயக்குநர் மோகன் ஜி, “ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட இயக்குநரின் படத்தில் பாட மாட்டேன் என்று சின்மயி முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அவரை பாட அழைத்திருக்க மாட்டேன். அவர் ஏன் மன்னிப்பு கேட்டார், யாராவது அழுத்தம் கொடுத்தார்களா என்பதை விளக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியது.
இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக தற்போது திரௌபதி 2 படத்தில் இருந்து சின்மயி பாடிய “எம்கோனே” பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த பாடலை வேறு ஒரு பாடகரை வைத்து மீண்டும் பாடவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சின்மயியின் குரல் படத்தில் இடம்பெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரௌபதி 2 திரைப்படம் ஜனவரி இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முடிவு படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Chinmayi song removed from Draupadi 2 Chinmayi voice is not wanted Mohan Ji takes a drastic decision