எடப்பாடி அறிவிப்பு…28-ம் தேதி மோடி எண்ட்ரி...! தேர்தல் கணக்குகள் வேகமாக நகர்கின்றன...!
Edappadi announcement Modis entry 28th Election calculations moving rapidly
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் உச்சக்கட்ட சூட்டுக்கு நகர்ந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்பே, அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கணக்குகளை வேகமாக முடுக்கிவிட்டுள்ளன.
இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், விரைவில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதே நேரத்தில், அரசியல் சூட்டைக் கூட்டும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ‘தாமரை மகளிர் மாநாட்டில்’ பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், இந்த நிகழ்வில் கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமர வைத்து அரசியல் பலத்தை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, கூட்டணியை இறுதி வடிவம் பெறச் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பே, கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க பா.ஜ.க. முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அ.தி.மு.க.–பா.ம.க. கூட்டணி உறுதியானது, தமிழக அரசியல் களத்தில் தேர்தல் புயல் முன்கூட்டியே வீசத் தொடங்கியுள்ளதை உணர்த்துகிறது.
English Summary
Edappadi announcement Modis entry 28th Election calculations moving rapidly