துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல்! தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் ஆட்சியா? சீமான் கொந்தளிப்பு!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Airport moorthy issue
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக வாசலியே நடைபெற்ற இத்தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கான மற்றுமொரு சான்றாகும். அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது அங்குள்ள காவலர்கள் வேடிக்கைப்பார்த்தனர் என்பது கொடுமையின் உச்சம்.
இதன்மூலம் காவல்துறை கலவரம் நடைபெறுவதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் விரும்புகிறதா? அதற்கு துணைபோகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவற்று வன்முறைத்தாக்குதல் தொடுப்பதுதான் அரசியல் அறமா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை முதல் நேற்றைக்கு ஆடுதுறையில் பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்களின் மீது வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றதுவரை தமிழ்நாட்டில் மக்கள் பணியாற்றும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல் நிலவுகிறது.
அதன் உச்சமாக இன்றைக்கு தலைநகரில், தமிழ்நாடு காவல்துறையின் அதி உயர் அலுவலக வாசலில், காவல்துறையினர் கண் முன்னேயே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா ? என்ற ஐயத்தை எழுப்புகிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்க திமுக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுதான் நாள்தோறும் நடைபெறும் கொடுங்குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Airport moorthy issue