ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு), விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது. ஆசிரியர்களே மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவுகிறார்கள். இளஞ்சமூகத்தின் அறிவை விசாலப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்தான். 

அரசுப் பள்ளிகளிலோ ஆசிரியரின் பணி மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், ஆசிரியர் பணிக்குத் தகுதியுடையவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமனம் பெறுகிறார்கள்.

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எட்டு ஆண்டுகளுக்கும்மேலாகக் காத்திருக்கிறார்கள்.  இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று வரை தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவருகிறார்கள்.
 
ஆனால் தமிழக அரசோ, ஏற்கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு என மற்றொரு தேர்வை எழுதச் சொல்லி அவர்களை வற்புறுத்துகிறது. இது சிறிதும் நியாயமற்றது. அரசின் இந்த முடிவு, ஏற்கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருப்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
 
கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் இது தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில்  தீர்வு கிடைக்காமல் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  

ஆசிரியராகப் பணிபுரிவதையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு, அதற்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலத்தைக்  கேள்விக்குறியாக்கி, அவர்களது வாழ்வை இருளில் தள்ளும்விதத்தில் இருக்கிறது `பணி நியமனத்திற்காக மீண்டும் ஒரு தேர்வு!' என்ற நடைமுறை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் (177) `2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணை, உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பில் பதிவு மூப்பு அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்  என்பது  ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தமிழக அரசு, ஆசிரியர்களின் நலனையும் மாணவர்களின் நலனையும் கருத்தில்கொண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் .A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு), தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM SAY ABOUT TN GOVT SCHOOL TEACHER EXAM


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->