ஆளுநருக்குத் தனி அதிகாரம் இல்லை: சிறைக்கைதிகள் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!
Landmark Verdict Madras HC Full Bench Rules Governor Bound by Cabinet Advice on Prisoner Release
தமிழகத்தில் சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மற்றும் தண்டனைக் குறைப்பு செய்வது தொடர்பான சட்டப் போராட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. "அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; அரசின் பரிந்துரையை நிராகரிக்க அவருக்குத் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி மற்றும் சட்டப் போராட்டம்:
தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு வழங்கிய பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்துப் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், ஒரு அமர்வு ஆளுநருக்கு நிராகரிக்கும் அதிகாரம் உண்டு என்றும், மற்றொரு அமர்வு அதிகாரம் இல்லை என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இந்த முரண்பாடுகளைக் களைவதற்காக, வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய 'முழு அமர்வுக்கு' (Full Bench) மாற்றப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா முன்வைத்த வலுவான வாதங்களை ஏற்ற நீதிபதிகள், இன்று இந்தச் பரபரப்பான தீர்ப்பை வாசித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு. தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை போன்ற விவகாரங்களில் ஆளுநர் சுயமாகச் செயல்பட முடியாது என்றும், அமைச்சரவையின் 'உதவி மற்றும் ஆலோசனைக்கு' (Aid and Advice) அவர் கட்டுப்பட்டவர் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு மாநில அரசின் இறையாண்மை மற்றும் அமைச்சரவையின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆளுநருக்கும் மாநில அரசிற்கும் இடையே நிலவி வரும் பல்வேறு அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில், இந்தத் தீர்ப்பு ஒரு மிக முக்கியமான சட்ட விளக்கமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பல கைதிகளின் விடுதலைப் பணிகள் இனி எவ்விதத் தடையுமின்றி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "அரசியலமைப்புச் சட்டமே இறுதியானது" என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.
English Summary
Landmark Verdict Madras HC Full Bench Rules Governor Bound by Cabinet Advice on Prisoner Release