தேவயானியிடம் குழந்தையே வேண்டாம் என்றுதான் சொன்னேன்! ராஜகுமாரன் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இனியா பாடல் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், தனது மகள்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ராஜகுமாரன் பேசியுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ‘காதல் கோட்டை’ திரைப்படம் தேவயானியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் நடித்த கமலி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அதன்பிறகு ‘பாட்டாளி’, ‘சூர்யவம்சம்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரெண்ட்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தேவயானி நடித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட்டையும் உருவாக்கிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் கிளாமர் காட்சிகளில் அதிகம் நடிக்காமல் முன்னணி கதாநாயகியாக வெற்றி பெற்ற நடிகைகளில் தேவயானியும் ஒருவர். நதியா, சித்தாரா உள்ளிட்ட நடிகைகளின் வரிசையில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிப் படங்களிலும் நடித்த தேவயானி, கிளாமர் விஷயத்தில் தனது கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அந்த மொழிகளிலும் அவர் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தேவயானி தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோது, இயக்குநர் ராஜகுமாரன் இயக்கிய ‘நீ வருவாய் என’ மற்றும் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இந்தக் காதலுக்கு தேவயானியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.

அந்த காலகட்டத்தில் தேவயானி முன்னணி நடிகையாக இருந்த நிலையில், அப்போது குறைந்த எண்ணிக்கையிலான படங்களையே இயக்கியிருந்த ராஜகுமாரனை அவர் திருமணம் செய்துகொண்டது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமணத்துக்குப் பிறகு ராஜகுமாரன் தொடர்ந்து அதிகளவில் படங்களை இயக்கவில்லை. தேவயானியை வைத்து ஒரு படத்தை இயக்கிய அவர், பின்னர் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘கடுகு’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகள்கள் குறித்து பேசிய ராஜகுமாரன், குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஆரம்பத்தில் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:“திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில், இந்த மோசமான உலகத்தில் என்ன தைரியத்தில் என்னை கொண்டு வந்தீர்கள், நான் எப்படி போராடுவேன், எப்படி கஷ்டப்படுவேன் என்று குழந்தைகள் என்னிடம் கேட்டால், நான் என்ன பதில் சொல்வது?

நான் தேவயானியிடம்கூட குழந்தைகள் வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால் அவர்தான் அதை கேட்கவே இல்லை” என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

ராஜகுமாரனின் இந்த வித்தியாசமான பார்வை குறித்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக, தனது குழந்தைகள் குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ள இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I actually told Devayani I didnot want children at all Rajakumaran speaks candidly


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->