கர்நாடகம், கேரளம் போல தமிழகத்திலும் புதிய டாஸ்மாக் நடைமுறை...! அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அதிரடித் தகவல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்களின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருவதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, டாஸ்மாக் பார்களில் உணவகங்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது.அதேவேளையில், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பல மதுக்கூடங்களில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்ற புகார்கள் நீண்ட காலமாக எழுந்து வருகின்றன.

இதையடுத்து, புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று, உணவகத்துடன் இணைந்து மதுபானம் வழங்கும் முறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் வழங்கும் முகாம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,"டாஸ்மாக் நிர்வாகத்தில் இதுவரை இருந்த நடைமுறைகளை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான நிறுவனங்களிடம் இருந்து மதுபானம் வாங்குவதற்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்பட்டு வந்தது கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில்தான்.

ஒரு நடைமுறையை மாற்ற வேண்டும் என்றால், அதை முழுமையாக மாற்ற வேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்து 120 நாட்கள்தான் ஆகின்றன. இன்னும் 1,400 நாட்களுக்கும் மேல் உள்ளன. இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும்.டாஸ்மாக் துறையை வருவாய் ஈட்டும் துறையாக மட்டுமே கடந்த கால ஆட்சியாளர்கள் அணுகியதாக அமைச்சர் தெரிவித்தார்.

டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தாலும், நிர்வாகக் குழுவாக இருந்தாலும், பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அணுகும் நிலை மாற வேண்டும். இந்த நடைமுறையை முழுமையாக மாற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது.மாற்றம் என்பது மதுபான விற்பனையின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்ல. போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கம்.கோவையில் விதிமுறைகளை மீறிய எப்.எல்.-2 மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மதுக்கூடங்களுக்கு எதிராக முதலில் 30 நாட்கள், 60 நாட்கள் என இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் நடைமுறை இருந்து வருகிறது.அதன்பிறகும் விதிமுறைகள் மீறப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எப்.எல்.-2 மதுக்கூடங்கள் வருவாய் ஈட்டுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிலை மாற வேண்டும்.

முதலில் எப்.எல்.-1 அரசு மதுபானக் கடைகளின் செயல்பாடுகளை முறைப்படுத்திய பின்னர், அடுத்தகட்டமாக எப்.எல்.-2 மதுக்கூடங்களின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும். தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த நடைமுறைகளில் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படும்.டாஸ்மாக் மதுக்கூடங்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், டாஸ்மாக் மதுக்கூடங்களுக்கான ஒப்பந்த நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என்றும், அதில் உணவகங்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உணவகங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் மதுக்கூடங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், தமிழக முதல்-அமைச்சர் விரைவில் கோவைக்கு வருகை தர உள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New TASMAC system Tamil Nadu like Karnataka and Kerala Breaking news released by Minister Vignesh


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->