விஜய், அஜித் இருவருக்கும் ரசிகராக இருங்க! சண்டை போடாதீங்க! வரலட்சுமி வைத்த கோர்க்கை!
Be a fan of both Vijay and Ajith Donot fight Varalaxmi appeal
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த விஜய் மற்றும் அஜித், தற்போது தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருகின்றனர். விஜய் அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக உள்ள நிலையில், அஜித் சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இருவரது ரசிகர்கள் குறித்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
விஜய் மற்றும் அஜித் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு ‘நேருக்கு நேர்’ படத்திலும் இருவரும் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அஜித் அந்தப் படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
காலப்போக்கில் இருவரும் தங்களது நடிப்புத் திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர். விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது.
அதேநேரத்தில், இருவரது ரசிகர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்களும் இருந்து வந்துள்ளன. காலப்போக்கில் நேரடி மோதல்கள் குறைந்தாலும், சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் அஜித் கலந்துகொண்டார். அவரது அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் அந்தப் பந்தயத்தை தொடங்கி வைத்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதுமட்டுமின்றி, விஜய்யை தனது ரேஸ் காரில் அமர வைத்து அஜித் ஒரு சுற்று அழைத்துச் சென்ற காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே நிலவி வந்த போட்டிக்கு மத்தியில், இரு நடிகர்களும் நட்புடன் சந்தித்துக் கொண்டது கவனம் பெற்றது.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வரலட்சுமி, விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“ரசிகர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இரண்டு பேருக்கும் ரசிகர்களாக இருக்க முடியாதா? நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள். அன்பை மட்டும் பகிருங்கள். பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்? யாரையும் குறை சொல்லாமல் ஒருவரின் ரசிகராக இருக்கலாமே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விஜய் அரசியல் பணிகள் குறித்தும் வரலட்சுமி பேசியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், குற்றங்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? குற்றங்கள் நடக்காத உலகம் வேண்டும். போதை இல்லாத சமூகத்தையும் உருவாக்க வேண்டும். அதற்கும் விஜய் முயற்சி செய்கிறார்” என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
விஜய் - அஜித் இருவரும் சந்தித்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ள நிலையில், இருவரது ரசிகர்களும் மோதல்களை தவிர்த்து நேர்மறையான விஷயங்களை பகிர வேண்டும் என்ற வரலட்சுமியின் வேண்டுகோளும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
English Summary
Be a fan of both Vijay and Ajith Donot fight Varalaxmi appeal