எம்.எஸ். சுப்புலட்சுமியாக ரஷ்மிகா மந்தானா! “நாம் செய்ய வேண்டியதை தெலுங்கர்கள் செய்கிறார்கள்” - சிவகுமார் சல்யூட்! - Seithipunal
Seithipunal


இந்திய இசை உலகின் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான 'இசை மேதை', 'பாரத ரத்னா' எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புதிய திரைப்படம் உருவாகிறது. 'எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்குகிறார். இதில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ், ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பென்னி வாசு பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் தொடக்க விழா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் கலை வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. இதில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகள், அவரது நலம் விரும்பிகள், திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இதையடுத்து, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் பிரபலமான பாடல்களை இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து அவருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசும்போது, “கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தயாரிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய விஷயத்தை அவர்கள் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட். இது பெருமிதமாகவும் இருக்கிறது” என்றார்.

மேலும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசிய சிவகுமார், “அவருடைய வாழ்க்கையைப் பற்றி நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம். அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்த பெண், இது போன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “அந்த மகத்தான அம்மாவைப் பற்றி சுயசரிதை திரைப்படம் உருவாகிறது என்றதும், அதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று சிவகுமார் கூறினார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம், அவரது கலை வாழ்க்கை மற்றும் இந்திய இசை உலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை திரையில் பதிவு செய்யும் வகையில் இப்படம் உருவாகி வருவதால், திரைப்பட ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rashmika Mandanna as MS Subbulakshmi Telugu people are doing what needs to be done Sivakumar salutes


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->