அதிர்ச்சி தரும் டெங்கு புள்ளி விவரம்...! - சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேருக்குத் தொற்று உறுதி...!
Shocking dengue statistics 87 confirmed infections one day Chennai alone
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு கணிசமாக பதிவாகி வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் சில பகுதிகளில் வெயிலும், சில இடங்களில் மழையும் மாறி மாறி நிலவி வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.பொதுவாக நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
டெங்கு பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சென்னையிலும் டெங்கு பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்து, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் இடங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
Shocking dengue statistics 87 confirmed infections one day Chennai alone