பச்சோந்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை, ஓட ஓட மக்கள் விரட்டி அடிப்பார்கள் என அதிமுக, பாஜகவிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது'' எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?
தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி, நெசவாளர் சமுதாயத்தினர் நலனுக்காக சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, எனப் பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது.
2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டுப் பாதிப் பணிகள் முடிந்த நிலையில் மோடி அரசு கிடப்பில் போட்டது. 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்ட அந்தத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு புதுவடிவத்தை உருவாக்கி நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து பணிகள் நடந்து வருகின்றன.
மன்மோகன் சிங் ஆட்சிக்கு முன்பு வி.பி.சிங் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது கலைஞர் வலியுறுத்தியதால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் உள்நாட்டு முனையத்திற்குக் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.
பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.
ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு. ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்குச் சேவகம் செய்து, மாநில உரிமையைப் பறிகொடுத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா தீரத்தோடு எதிர்த்தார். அதனையெல்லாம் பழனிசாமியோ பயத்தோடு ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுகே வந்தார். பழனிசாமி அமித்ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார்.
ஒன்றிய அரசின் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலைக்காக, வனங்களையும், வயல்களையும் பலி கொடுக்கத் தயாரானார். காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போதெல்லாம் ஜெயலலிதாவிடம் இருந்து கடுமையாக அறிக்கை வரும். போராட்டம் நடத்துவார். ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான பழனிசாமியிடம் இருந்து ஓர் அறிக்கையாவது வந்ததா? அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.
தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி கிடையாது என்று அவமானப்படுத்தப்படுத்தி, தமிழர்களின் தன்மானம் சீண்டப்பட்ட போது பழனிசாமி எதிர்த்து குரல் கொடுத்தாரா? துணை வேந்தர் நியமனம் தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தி, இந்தியா முழுமைக்கும் அதிகாரம் பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல சூரப்பா விவகாரத்தில் சூரத்தனம் காட்டினாரா பழனிசாமி?
ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனி ராஜ்ஜியம் நடத்திய போது அன்றை எதிர்க் கட்சியான திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால், முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு காட்டாமல் பல்லிளித்துக் கொண்டிருந்தார். இப்படி எத்தனை எத்தனை துரோகங்கள். தலைவிக்குத் துரோகம் செய்துவிட்டு டெல்லி தலைமைக்குக் கட்டுப்படும் கோழை பழனிசாமி, மிரட்டல் பற்றியெல்லாம் பேச அருகதை இல்லை!
நீட் தேர்வை அனுமதித்து அப்பாவி ஏழை நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நாசமாக்கியது, தமிழ்நாட்டிற்குப் பாரபட்சமான நிதிப் பகிர்வு அளிக்கும் GST யை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து முஸ்லிம்களின் முதுகில் குத்தியது, உழவர்களைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது, மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு, கனிம வளச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலம் விடக் காரணமாக இருந்தது என மோடி அரசுக்குத் துணையாக நின்ற விஷயங்கள் எல்லாம் அதிமுக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.
2019 – 2024 மோடி ஆட்சியில் திமுக கூட்டணி எம்.பி-கள் 9,695 கேள்விகளை ஐந்தாண்டில் மக்களவையில் எழுப்பினார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்தார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் தமிழ்நாட்டு எம்.பி-கள் 5-ஆவது இடத்தில் இருந்தனர். கட்சிகள் வாரியாக கேள்விகள் எழுப்பியதில் திமுக 5வது இடத்தில் இடம் பெற்றது. நாடாளுமன்றத்தில் அதிமுக சாதித்தது என்ன? என பழனிசாமி புள்ளிவிவரம் சொல்லுவாரா?
நீட் தேர்வைத் திரும்பப் பெறத் தொடர் போராட்டம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல், காவிரி, மேக தாட்டு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடியது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துக்கு எதிர்ப்பு, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
''அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது' என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்ட போது பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கை.
கூட்டணி மகிழ்ச்சி என்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியதுதானே! ஏன் செய்யவில்லை? 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி" என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.