சுற்றுச்சூழல் விதிமீறல் – இழுத்து மூடப்பட்ட கன்னட பிக் பாஸ்..என்ன காரணம் தெரியுமா?
Environmental violation Kannada Bigg Boss was pulled and shut down Do you know the reason
கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB), பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடம் படப்பிடிப்பு தளத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் பேரில், பிடதி ஹோப்ளி பகுதியில் உள்ள ஜாலி வுட் ஸ்டுடியோஸ் மற்றும் அட்வென்ச்சர்ஸ் வளாகத்தில் அமைந்திருந்த பிக் பாஸ் கன்னட படப்பிடிப்பு தளத்துக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
KSPCB தலைவர் பி.எம். நரேந்திர சுவாமி தெரிவித்துள்ளார்:“படப்பிடிப்பு தளத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதி சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்துகிறது.”
தயாரிப்பு குழு, 250 KLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) நிறுவியதாகக் கூறினாலும், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில்,STP இயக்கப்படாமல் இருந்தது.உள் வடிகால் இணைப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை
என்பது தெரியவந்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் கோப்பைகள், காகிதத் தட்டுகள் போன்ற திடக் கழிவுகளை பிரித்து மேலாண்மை செய்யும் முறையும் இல்லை. கழிவுநீர் மேலாண்மை மற்றும் STP செயல்பாடுகள் குறித்த ஆவணங்களும் தளத்தில் காணப்படவில்லை.
படப்பிடிப்பு தளத்தில் 625 kVA மற்றும் 500 kVA திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு வந்தன. இது கூட சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றப்படும் வரை, பிக் பாஸ் கன்னட படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், BESCOM மின் விநியோகத்தையும் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் கன்னடம் சீசன் 12, தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த செய்தி ட்வீட்டின் கீழ் பல கோலிவுட் ரசிகர்கள்,“தமிழ் பிக் பாஸையும் மூட ஏதாவது வழி இருக்கா, யுவர் ஹானர்!”என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் 2வது சீசனில், நீச்சல் குளம் நீர் மேலாண்மை பிரச்சனைகள் காரணமாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. தற்போது கூட,டாய்லெட்டில் தண்ணீர் சரியாக வராமல் இருப்பது,போட்டியாளர்கள் நீச்சல் குளம், ஜக்குஸி ஆகியவற்றில் தேவையில்லாமல் தண்ணீரை வீணடிப்பது,போட்டியாளர்களின் சண்டைகள், ஆபாச தொனிகள்என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், பிக் பாஸ் கன்னட படப்பிடிப்பு தளம் மூடப்பட்டிருப்பது, இந்திய ரியாலிட்டி ஷோக்களில் சுற்றுச்சூழல் மற்றும் ஒழுங்குமுறை பிரச்சனைகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Environmental violation Kannada Bigg Boss was pulled and shut down Do you know the reason