குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கோரி திருநங்கை (எஸ்.ஐ) தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Thirunangai baby Court
குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானத்துடன் முடித்துவைத்து உத்தரவிட்டது.
சென்னை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திருநங்கை கே. பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில், “தனிமையில் வாழும் நான் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். இதற்காக மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தேன். ஆனால், நான் திருநங்கை என்ற காரணத்திற்காகவே என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது சட்டத்திற்கும், சமத்துவக் கொள்கைக்கும் முரணானது” எனக் கூறினார்.
வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்குரைஞர் கே.வி. சஞ்சீவ்குமார், “திருநங்கை என்ற காரணத்தால் மட்டும் தத்தெடுப்பு மறுக்கப்படுவது பாகுபாடு” என வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் விவேகானந்தன், “சிறார் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும் மூன்றாம் பாலினத்தவருக்கான தத்தெடுப்பு உரிமை குறித்து விதிகள் இல்லை. அதனால் தான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது” என தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, “மூன்றாம் பாலினத்தவருக்கும் தத்தெடுப்பு உரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என கூறினார். மேலும், மனுதாரர் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு மனு அனுப்ப வேண்டும்; அந்த மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.