மீத்தேன் திட்டத்தில் ஸ்டாலின் கையெழுத்து… விவசாயிகளை காப்பாற்றியது அதிமுக! -இபிஎஸ் கடும் தாக்கு
Stalin signed methane project agreement AIADMK saved farmer EPS launches strong attack
தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் மேடையையே சூடேற்றும் வகையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டது ஸ்டாலின்; ஆனால் அந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான்,” எனத் தொடங்கிய அவர், “விவசாயியின் வியர்வைத் துளியை மதித்த ஒரே ஆட்சி அதிமுக; திமுகவுக்கு மக்களைவிட குடும்பமே முக்கியம்” என்று சாடினார்.

மேலும், குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாகவும், உர மானியம், உழவு மானியம், குறுவை தொகுப்பு திட்டங்கள், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நேரடி ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
“அதிமுக ஒரு மக்கள் இயக்கம்; இங்கு தொண்டர்கள்தான் தலைவர்கள்,” என்று வலியுறுத்திய அவர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கடும் வறட்சி, கஜா புயல், கொரோனா போன்ற தொடர்ச்சியான சவால்கள் இருந்தபோதும் திறம்பட நிர்வாகம் செய்ததாக நினைவுகூர்ந்தார்.
“ஒரு வருடம் அரசுக்கு வருமானமே இல்லாத சூழலிலும் கடனை சுமையாக ஏற்றுக்கொள்ளாமல் ஆட்சி நடத்தியோம். ஆனால் இன்று வருமானம் இருந்தும் திமுக அரசு கடன் மேல் கடன் வாங்கி மாநிலத்தைச் சுமையடிக்கிறது; இதுவரை ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது,” என குற்றம்சாட்டினார்.
விலைவாசி உயர்வு, குற்றச்செயல்கள், போதைப்பொருள் பரவல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், “தமிழக மக்கள் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டிய நேரம் இது,” என ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.
English Summary
Stalin signed methane project agreement AIADMK saved farmer EPS launches strong attack