08 லட்சம் நிறைவேற்று மனுக்கள் நிலுவை; விரைந்து முடித்து வைக்க உச்சநீதின்றம் அறிவுறுத்தல்..!
Supreme Court directs expedited disposal of 8 lakh pending EP petitions
நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 8 லட்சம் நிறைவேற்று மனுக்கள் (Execution Petition) கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறயுள்ளது. இது மிகவும் அச்சமூட்டுவதாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
சிவில் வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அல்லது ஆணையை நடைமுறைப்படுத்தத் தாக்கல் செய்யப்படும் இந்த நிறைவேற்று மனு (EP), ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், எதிர்தரப்பினர் தானாக முன்வந்து அதை நிறைவேற்றாத போது, நீதிமன்ற அதிகாரத்தின் மூலம் அதைச் செயல்படுத்த இந்த EP மனு பயன்படுகிறது.
அதாவது, உரிமையியல் சார்ந்த விவகாரங்களில், குறிப்பாகச் சொத்துத் தகராறுகளில், தனக்குச் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெறுவது மட்டும் போதுமானதல்ல. பெரும்பாலான நேரங்களில், வழக்கில் தோற்ற தரப்பினர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், வெற்றி பெற்ற தரப்பினர் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, ஒரு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது.
சமீபத்திய நிலவரப்படி நாடு முழுவதும் ஆறு மாதங்கள் பழமையான 7,95,981 நிறைவேற்று மனுக்கள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நிறைவேற்று மனுக்களை விரைந்து முடித்து வைப்பதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தங்களுக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அடுத்த விசாரணைத் தேதியான 07.10.2026-க்குள், நிறைவேற்று மனுக்களைத் திறம்படவும் விரைவாகவும் முடித்து வைப்பதற்காக, அந்தந்த மாவட்ட நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் அல்லது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து, ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் சுருக்கமாக தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இது போன்ற வழக்குகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிப்பதற்கான தனது வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் 16, 2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 8.82 லட்சத்திற்கும் அதிகமான நிறைவேற்று மனுக்கள் நிலுவையில் இருந்தன. இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், கவலைக்குரியதாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், 06 மாதங்களுக்குள் வழக்குகளை முடிப்பதை உறுதி செய்யவும், திறமையான கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்கவும் உயர் நீதிமன்றங்களை வலியுறுத்தியிருந்தது.
தனது சமீபத்திய உத்தரவில், வழக்குகளை முடிப்பதில் முன்னேற்றம் இருந்த போதிலும், நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தற்போதைய தரவுகளின்படி, 7,95,981 நிறைவேற்று மனுக்கள் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், வழக்குத் தொடுப்பவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைத்த பிறகும் கூட அவர்களின் இன்னல்கள் முடிவதில்லை என்றும், ஏனெனில் அத்தீர்ப்பின் பலன்களை அவர்களால் பல ஆண்டுகளாக அனுபவிக்க முடிவதில்லை என்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
இந்த நிறைவேற்று மனுக்களை ஆறு மாதங்களுக்குள் முடித்து வைப்பதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. மார்ச் 2025-இல் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களில் 4.3 லட்சத்திற்கும் அதிகமான நிறைவேற்று மனுக்களும், கடந்த ஓராண்டில் சுமார் 7.7 லட்சம் வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டுள்ளதைச் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தனது உத்தரவைச் செயல்படுத்துவதில் மாவட்ட நீதித்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை, ஆனால் இன்னும் வேகம் அவசியம் என்று மேலும், குறிப்பிட்டுள்ளது.
English Summary
Supreme Court directs expedited disposal of 8 lakh pending EP petitions